இந்துத்வா அரசியலை மக்கள் நிராகரிக்கவில்லை.. அடித்து சொல்லும் அண்ணாமலை!
சென்னை: தமிழக தேர்தல் முடிவுகள் இந்துத்துவா அரசியலை நிராகரிக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்த நிலையில் செய்தியாளர்களுக்கு நேற்று அண்ணாமலை பேட்டி அளித்தார்.
லோக்சபா தேர்தலில் 441 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 240 இடங்களில் வென்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காவிட்டாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்து இருப்பதால் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

பிரதமர் மோடி வரும் 8 ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலையே தோல்வியை தழுவினார். தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வி அடைந்து இருப்பதை இந்துத்வா அரசியலை நிராகரித்து விட்டதாக பார்க்க முடியாது. எது தவறாக போனது என்பது குறித்து ஆலோசனை செய்து பாடம் கற்றுக்கொள்வோம். தமிழகத்தில் பாஜக வெற்றிபெறவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி வாக்கு சதவீதத்தையும் அதிமுக கூட்டணி வாக்கு சதவீதத்தையும் சேர்த்தால் 30 முதல் 31 தொகுதிகள் வரை திமுகவை பின்னுக்கு தள்ளியிருக்கலாம் என்று கூறுகிறார்கள். மக்கள் தேர்தலில் வாக்களிக்கும்போது ஒவ்வொரு கூட்டணியாக பார்த்துதான் வாக்களிக்கிறார்கள். நாங்கள் சேர்ந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்பதை விட, இருவரும் ஏதோ ஒரு காரணத்துக்காக சேரவில்லை என்பதுதான் உண்மை.
தமிழகத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு. பாஜக கூட்டணி ஆட்சி அமையும். அதற்காக, கடினமாக உழைப்போம். லோக்சபா தேர்தலில், 50 ஆண்டுகால அரசியல் கட்சி 7 இடத்தில் டெபாசிட் இழந்துள்ளது. அதை நடத்தி காட்டியது தேசிய ஜனநாயக கூட்டணிதான். அதிமுக கோட்டை என்று கூறும் கோவையில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் அக்கட்சி டெபாசிட் பெற்றுள்ளது.
என்னுடைய வேலை கட்சியை வளர்ப்பதுதான். யாரையும் அனுசரணை செய்வது கிடையாது. அனுசரணை செய்ய வேண்டும் என்றால் வேறு தலைவரை நியமிப்பார்கள். ஆனால், பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் கூறியபடி பணியாற்றுகிறேன்.
அதற்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்கி உள்ளார்கள்.எனக்கு நாவடக்கம் வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பேசினார். அவரது மகன் தென்சென்னையில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அரசியலில் ஆச்சரியம் நடக்கும். உயர்வு, சரிவும் வந்துக் கொண்டுதான் இருக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications