பத்ம சேஷாத்ரி நமக்கு ஒரு பாடம்.. ஆன்லைன் வகுப்புகளுக்கு வருகிறது புதிய கைட்லைன்- அன்பில் மகேஷ் உறுதி
சென்னை: ஆன்லைன் வகுப்புகளில் இப்படி முறைகேடு நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் எல்லோருக்கும் ஒரு பாடமாக அமைந்து விட்டது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் பாடம் நடத்தும்போது இடுப்பில் வெறும் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு மாணவிகள் முன்பாக வந்து நிற்பார் என்பது குற்றச்சாட்டு.
மேலும் பலவகைகளில் ஆன்லைனில் பாலியல் சீண்டல்களை அவர் செய்திருந்தார். இந்த நிலையில், ராஜகோபால், போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அப்போது இந்த பாலியல் சீண்டல்கள் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். பதில் அளித்து அவர் கூறியதாவது: காவல்துறையினர் தற்போது ஆசிரியரிடம் விசாரித்து வருகின்றனர். அவர்கள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆன்லைன் வழிகாட்டுதல்கள்
ஆன்லைன் வகுப்புகளுக்கு, ஏற்கனவே, வழிகாட்டு நெறிமுறைகள் தரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை வைத்துப் பார்த்தால் அவர்கள் அதை பின்பற்றவில்லை என்று தெரிகிறது. எனவே, ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின் பின்பற்ற வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் மீண்டும் அறிவுறுத்தி உள்ளோம்.

நல்ல ஆசிரியர்கள்
பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழுவை ஏற்படுத்தி இருக்கிறோம். நல்லாசிரியர்கள் மீது பொய்யான புகார் வந்துவிடக்கூடாது. எனவே புகார்களை உறுதி செய்வதற்காக இந்த குழு அமைக்கப்பட்டு புகாரில் உண்மை தன்மையை அவர்கள் விசாரணை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

புதிய கொள்கை
ஆன்லைன் வகுப்புகளில் இதுபோல நடைபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த சம்பவத்தில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இனிமேல் இப்படி சம்பவங்கள் நிகழாமல் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை ஆன்லைன் வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே உள்ள ஆன்லைன் வகுப்புகள் வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை மாற்றியமைத்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

விசாகா கமிட்டி
அனைத்து பள்ளிகளிலும் பாலியல் சீண்டல்களை தடுப்பதற்காக விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளதா என்பது தீவிரமாக கண்காணிக்கப்படும். பாலியல் சீண்டல் நடைபெற்றுள்ளது சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி ஆகும் எனவே அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications