பதற வைத்த SIR! பறிபோனது 97 லட்சம் வாக்குகள்.. மீண்டும் வந்ததோ 9 லட்சம் விண்ணப்பங்கள்! முழு விபரம்!
சென்னை: தமிழகத்தில் SIR பணிக்கு பின் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் மாநிலம் முழுவதும் மொத்தம் 97 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் முகவரியில் வசிக்கவில்லை என்று கூறி மட்டுமே, 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 4 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் சுமார் 9 லட்சம் பேர் தங்கள் பெயர்களை மீண்டும் சேர்க்கக் கோரி விண்ணப்பம் அளித்துள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு SIR நடைமுறை தமிழகத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி, அவற்றை பூர்த்தி செய்து பெற்றனர்.

முதலில் டிசம்பர் 4 வரை இருந்த அவகாசம், பின்னர் டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டது. இந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தற்போது தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடி 43 லட்சம் 76 ஆயிரத்து 755 ஆகக் குறைந்துள்ளது.
தமிழக வாக்காளர் பட்டியல்
இதில் ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஒரே நேரத்தில், மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது மொத்த வாக்காளர்களில் 15 சதவீதத்தைத் தாண்டுகிறது. இதில் 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர் இறந்தவர்கள் என பதிவாகியுள்ளனர். மேலும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேருக்கு இரட்டை பதிவு இருந்ததால் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பெயர் நீக்கம்
ஆனால், முகவரியில் இல்லாதவர்கள் எனக் கூறி நீக்கப்பட்டவர்கள் மட்டும் 66 லட்சத்துக்கும் மேல் இருப்பது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இவர்களில் சிலர் உண்மையிலேயே அந்த முகவரியில் வசிக்காதவர்களா? அல்லது தகுதியான வாக்காளர்களும் தவறுதலாக நீக்கப்பட்டுள்ளனரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால், தங்களின் பெயர் தவறாக நீக்கப்பட்டதாக நினைக்கும் வாக்காளர்கள், படிவம் 6 மூலம் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கான அவகாசம் ஜனவரி 18ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்
அதேபோல் பெயர் நீக்கத்திற்குப் படிவம் 7, திருத்தம் மற்றும் இடமாற்றத்திற்குப் படிவம் 8 பயன்படுத்தப்படுகின்றன. ஆதார் எண் மட்டும் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அதோடு பிறப்பு சான்றிதழ் அல்லது இருப்பிடச் சான்று போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும், அதன்பின் ஜனவரி 3 மற்றும் 4ஆம் தேதிகளிலும் தமிழகமெங்கும் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
தேர்தல் ஆணையம்
இதில் 18 வயது நிரம்பிய தகுதியுடைய பல இளைஞர்கள் படிவம் 6 மற்றும் 6A மூலம் புதிய வாக்காளர் சேர்க்கை விண்ணப்பங்களை அளித்தனர். அதேபோல், இறந்தவர்களின் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் குறிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. இந்த நான்கு நாள் சிறப்பு முகாம்கள் மூலம், டிசம்பர் 19 முதல் ஜனவரி 3ஆம் தேதி இரவு 8 மணி வரை மட்டும், மொத்தம் 9 லட்சத்து 14 ஆயிரத்து 931 பேர் வாக்காளர் பெயர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். ஜனவரி 18ஆம் தேதி வரை இன்னும் விண்ணப்பிக்கலாம் என்றும், இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதி உள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
