5 நாட்களுக்கு தட்டி எடுக்கப்போகும் மழை..உங்க ஊர்ல தீபாவளி வியாபாரம் பாதிக்குமா? செக் பண்ணுங்க
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 17ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்றைய தினம் குமரிக்கடல், மன்னர் வளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் இரவு நேரங்களில் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வாடிப்பட்டி, மஞ்சளார் பகுதிகளில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. ராஜபாளையம், ஆண்டிபட்டியில் 9 செமீ மழையும்,கொடைக்கானல் படகு குழாம் பகுதியில் தலா 8 செமீ மழையும் பதிவாகியுள்ளது. சாத்தான்குளம், பிலவக்கல் பகுதியில் 7 செமீ மழையும், பேராவூரணி, ஆலங்குடி பகுதிகளில் தலா 5 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சிராப்பள்ளி, டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால்) புதுக்கோட்டை மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இடி மின்னலுடன் கனமழை
14ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தென் தமிழகத்தில் கனமழை
15ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு
16 மற்றும் 17ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை நிலவரம்
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
குமரிக்கடல், மன்னர் வளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications