மாண்டஸ் ஓவர்! வங்கக்கடலில் உருவாகும் அடுத்த "சங்கு சக்கரம்".. என்ன நடக்கும்? வல்லுனர்கள் வார்னிங்
சென்னை: அந்தமான் அருகே வங்கக்கடலில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாவதற்கான சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது வலிமை குறைந்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'மாண்டஸ்' புயல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கரையை கடந்தது. மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து வலிமை இழந்தது. அதி தீவிர புயலாக இருந்த இந்த மாண்டஸ் புயலாக வலிமை குறைந்தது.
கரையை கடந்த பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவி வந்தது. இதன் பின் மேலும் நகர்ந்த புயல் தற்போது அரபிக்கடலை நோக்கி சென்றுள்ளது.

வர்தா
வர்தா புயலை போல இல்லாமல் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை வேகமாக மீண்டு வந்து கொண்டு இருக்கிறது. 48 மணி நேரங்களுக்கு முன்பாக இந்த புயல் மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் வர்தா அளவிற்கு வலிமையான புயல் கிடையாது. ஆனாலும் புயலை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எதிர்கொண்ட விதத்தை பாராட்ட வேண்டும். முக்கியமாக தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு பணிகளை முடித்து உள்ளனர்.

மாண்டஸ்
வலிமை இழந்த மாண்டஸ் புயல் தற்போது கேரளா அருகே கடல் பகுதியில் நிற்கிறது. இது வலிமை இழந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக இருக்கிறது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற உள்ளது. தீபகற்ப இந்தியாவின் வானிலையில் உள்ள தாக்கத்தால் அது வலிமை குறைந்து அப்படியே மறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றும், இன்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், வட தமிழகத்தின் உள் பகுதிகளிலும் இந்த சுழற்சியால் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக மழை பெய்தது. இந்த நிகழ்வு இன்று இரவு வரை தொடரும். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையும்.

புயல்
வங்கக்கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிக்கொண்டு இருக்கிறது. இதனால் இன்னொரு புயல் தாக்குமா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இந்த சங்கு சக்கரத்தை பல ஊடகங்கள் சென்னையில் தாக்க போகும் அடுத்த புயல் என்று வர்ணிக்க தொடங்கிவிட்டனர். மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அந்தமான் கடலை அடைந்த போது இருந்ததை போலவே இந்த புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு இருக்க போகிறது. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
மாண்டஸ் புயலாகும் முன் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அந்தமான் அருகே நுழைந்தது. தற்போது நுழையும் தாழ்வு பகுதி, கொஞ்சம் இதற்கு தெற்காக உள்ளே நுழைகிறது.காற்றழுத்த தாழ்வு பகுதியில் பெரிய மாற்றத்தை இந்த மாற்றம் ஏற்படுத்த உள்ளது. Coriolis forces காரணமாக இந்த சுழற்சி தீவிரமாக சுழலாமல் தடுக்கும். மாண்டஸ் புயல் வடமேற்கு திசையில் சென்றது போல இல்லாமல் இந்த தாழ்வு பகுதி பெரும்பாலும் இலக்கில் இருந்து மேற்கு திசையில் செல்லும். மாண்டஸ் காரணமாக ஏற்பட்ட தாழ்வு பகுதியோடு ஒப்பிடும் போது இந்த தாழ்வு பகுதி வலிமை குறைந்து இருக்க போகிறது.

மேற்கு நோக்கிய நகர்வு
இருப்பினும் இதன் மேற்கு நோக்கிய நகர்வு காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில், வடக்கு கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய போகிறது. வடகிழக்கு பருவமழை கோட்டா மட்டுமின்றி, மொத்தமாக இந்த வருட மழைக்கான கோட்டாவையும் இந்த மழை நிறைவு செய்ய போகிறது. மாண்டஸ் புயல் வலிமை குறைந்து தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் இன்று இரவு வரை மழை பெய்யும். அதன்பின் மழை படிப்படியாக குறையும். இன்றிரவு மற்றும் நாளை அதிகாலை கிழக்கு காற்று மூலம் வந்த ஈரம் காரணமாக கொஞ்சம் மழை பெய்யும். அதன்பின் மழை குறையும். அடுத்த 3/4 நாட்களுக்கு வட கடலோர தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பெரும்பாலான தீபகற்ப பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவ போகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை முதல் மழை குறைவதற்கு முன், இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை ரெயின்ஸ் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications