சென்னை, மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்...மழையும் பெய்யும்
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், சென்னை, மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலம் முடிந்த பின்னரும் அனல் காற்று வீசி வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தாண்டி வெப்பநிலை பதிவானது. சென்னை, மதுரை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
திருவண்ணாமலை வேலூரில் நேற்று 7 செமீ அளவிற்கு பலத்த மழை பெய்துள்ளது. இந்த நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக திருவண்ணாமலை, கடலூர். கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்கள்,கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்கள், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

4 நாட்களுக்கு மழை
ஜூன் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி பதிவாகும்.

15 மாவட்டங்களில் வெப்பநிலை
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, கடலூர், புதுவை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம்,மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு அறிவிப்பு
குமரிக்கடல், இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இன்று முதல் 4ஆம் தேதி வரைக்கும் தெற்கு அரபிக்கடலோர பகுதிகளிலும் கேரளா கடலோர பகுதிகளிலும் லட்சத்தீவு பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த கடலோர பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications