"கஞ்சா ஹீரோக்கள்தான் தமிழ்நாடு முழுக்க இருக்கிறார்கள்".. திமுக அரசு மீது தமிழிசை கடும் தாக்கு!
சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டதாகவும், தற்போது 'கஞ்சா ஹீரோக்கள்' தான் மாநிலம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "தமிழக அரசின் 'விடியல்' ஆட்சி என்பது வெறும் விளம்பரம் மட்டுமே. போதைப்பொருள் விற்பனை செய்பவர்களைக் கண்டுபிடிப்பதை ரகசியமாக வைத்திருக்கும் அரசு, அவர்களைக் காப்பாற்ற முயல்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் போதைப்பொருள் கலாச்சாரம் குறித்துப் பேசிய தமிழிசை, "மதுரையில் ஒரு 'அஞ்சா நெஞ்சன்' இருந்தார், இப்போது சென்னையில் 'ஜீரோ கஞ்சா' என்கிறார்கள். ஆனால் உண்மையில் இங்கு நடப்பதோ 'ஹீரோ கஞ்சா' விளையாட்டுதான். தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் யார் என்று கேட்டால் அரசு அதை ரகசியமாக வைத்திருக்கிறது. கஞ்சா ஹீரோக்களின் கூடாரமாகத் தமிழ்நாடு மாறிவிட்டது. போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கத் துப்பு துலக்குபவர்களை விட, விற்பனை செய்பவர்களுக்கே அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் "ஒரு பக்கம் 'வெல்லும் பெண்கள்' என விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் மறுபக்கம் ஜவுளித் துறையில் பணியாற்றும் பெண்கள், தங்களது அடிப்படைத் தேவைகளுக்காகக் கூட வழியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். கழிப்பறை வசதிகள் கூட இல்லாத இடங்களில் பணியாற்றும் பெண்கள், தங்களது உடைகளைக் மாற்றக் கூட முடியாமல் கூனிக்குறுகி நிற்கும் அவல நிலை நீடிக்கிறது. புத்தாண்டு தினத்தில் இத்தகைய வருத்தமான செய்திகளைச் சொல்ல வேண்டியிருப்பது கவலையளிக்கிறது. ஆனால் இதுதான் தமிழகத்தின் எதார்த்த நிலை" என்றார்.
மேலும், சென்னையில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் துயர நிலை மற்றும் உழைக்கும் பெண்களின் அடிப்படை வசதி குறைபாடுகள் குறித்துப் பேசிய அவர், தமிழக மக்கள் உண்மையான விடியலைக் காண வேண்டும் என்றால், தேசிய அளவிலான மாற்றமே தீர்வாக அமையும் எனத் தெரிவித்துள்ளார் தமிழிசை.
மேலும், "தமிழகத்திற்கு உண்மையான விடியல் இன்னும் பிறக்கவில்லை. மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளனர். தமிழக மக்கள் உண்மையான விடியலைக் காண வேண்டும் என்றால், இரட்டை இலையுடன் தாமரை மலர வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் அதிகரிக்க வேண்டும். ஆசிரியர்கள் வீதியில் இறங்கிப் போராடும் சூழலும், சாமானியப் பெண்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நிலையும் மாற வேண்டும் என்றால், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications