ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை.. தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!
சென்னை: பனை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு உள்ளிட்ட துறைகள் வேளாண் துறையின் கீழ் அடங்கும். பட்ஜெட்டில் விவசாயிகளை பாராட்டி பேசினார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்.
மத்தியிலும் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாட்களாக இருக்கும் கோரிக்கையாகும். இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலின் போது வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்
அதன்படி தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தவுடன் தமிழகத்தில் விவசாயத் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழகத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்த நிலையில் வேளாண் துறைக்கான பட்ஜெட்டும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

பட்ஜெட்டில் இடம்பெறக் கூடிய அம்சங்கள்
முன்னதாக இந்த பட்ஜெட்டில் இடம்பெறக் கூடிய அம்சங்கள் குறித்து விவசாயிகளிடம் கருத்தை கேட்க தஞ்சாவூர், திருச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நேற்றைய தினம் தமிழக பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் முறையாக இ பட்ஜெட் தாக்கலானது. இதை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இன்றைய தினம் வேளாண் துறைக்கான பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் குறித்து உரை
முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட் குறித்து அவர் உரையாற்றினார். அவர் கூறுகையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுவோருக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன். தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் கருத்து கேட்ட பின்னரே வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வேளாண் வணிகர்களையும் கருத்துக் கேட்ட பின்னரே வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

வேளாண் மக்கள் பெருமிதம்
வேளாண் மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் வேளாண் உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மனித நாகரீகம் பன் மடங்கு வளர்ந்தாலும் உணவின்றி உயிர்வாழ இயலாது. பால்வளம் உள்ளிட்ட அனைத்து வளங்களையும் மேம்படுத்துவதே அரசின் நோக்கம். உணவு தானிய உற்பத்தியில் முதல் 3 இடங்களுக்குள் தமிழ்நாடு இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

தனி பட்ஜெட் தாக்கல்
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வது தொலை நோக்குத் திட்டமாகும். விளைநிலங்கள் வீட்டுமனை ஆவதால் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. விவசாய சாகுபடி பரப்பை 75% ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இரு போக சாகுபடி நடைபெறும் பரப்பை 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 10 ஆண்டுக்குள் 11.75 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்ற புதிய திட்டம் தொடங்கப்படும். கூட்டுறவு சங்கம் மூலம் அதிகளவு பயிர்க் கடன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காய்கறி, கீரை சாகுபடி
அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி, கீரை சாகுபடி பயிர் செய்ய மானியம் வழங்கப்படும். காய்கறி, கீரை சாகுபடியை பெருக்க மானியம் அளிக்கும் திட்டத்திற்கு ரூ. 95 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வைட்டமின் சி பெட்டகம் எனப்படும் நெல்லி 200 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படும். பனை வெல்லத்தை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பனை மேம்பாடு இயக்கம் தொடக்கப்பட்டுள்ளது. பனை மரத்தை வெட்டும்போடு ஆட்சியரின் அனுமதி பெறுவது அவசியம் ஆகும்.

சாதாரண ரக நெல்
நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண ரக நெல்லுக்கு ஊக்கத்தொகை ரூ 50ல் ரூ 75 ஆக அதிகரித்துள்ளது. சாதாரண ரக நெல் ஒரு குவிண்டால் ரூ 2015க்கு கொள்முதல் செய்யப்படும். சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ஊக்கத் தொகை 70ல் இருந்து 100 ஆக உயர்த்தப்படுகிறது. நெல் குவிண்டால் சன்ன ரகம் ரூ. 2060 க்கு கொள்முதல் செய்யப்படும்.

கரும்பு விவசாயிகள்
பழப்பயிர் சாகுபடிக்கு ரூ.29.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.40 கோடியும் இலகு ரக சரக்கு வாகனங்கள் வாங்கும் திட்டத்திற்கு ரூ.21.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள் வேலை தருபவர்களாக மாற வேண்டும். முதற்கட்டமாக 2,500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்கப்படும். இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதிய உணவுத் திட்டம்
பயறு வகைகளை கொள்முதல் செய்து மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும். புரதச்சத்து மிக்க பயறு வகைகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும். சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும். தஞ்சையில் தென்னை மதிப்புக் கூட்டும் மையம் அமைக்கப்படும். மழையில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுவதை தடுக்க தார்ப்பாய்கள் வழங்கப்படும். ரூ.52.02 கோடியில் விவசாயிகளுக்கு தார்பாய்கள் வாங்க வழங்கப்படும். மதிய உணவுத் திட்டத்திலும் ரேஷன் கடைகளிலும் பயிறு வகைகள் வழங்கப்படும். துவரை உளுந்து, பச்சைப் பயிறு 61 ஆயிரம் டன் அளவிற்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications