வேல்முருகன் வைத்த கோரிக்கை.. டென்ஷனாகி துரைமுருகன் கொடுத்த பதில்.. சட்டசபையில் திடீரென வாக்குவாதம்!
சென்னை: சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனுடன் பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பவானி தொகுதிக்கான கோரிக்கையை வேல்முருகன் கேட்டதால், உங்கள் தொகுதிக்கான பிரச்சனைகளை மட்டும் கேளுங்கள்.. மற்ற தொகுதிகளின் கோரிக்கையை கேட்க அந்தந்த தொகுதிகளின் எம்எல்ஏ-க்கள் உள்ளார் என்று துரைமுருகன் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டசபையின் 4வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதிமுகவின் 54வது நாள் தொடக்க விழா என்பதால், அக்கட்சி எம்எல்ஏ-க்கள் பலரும் சட்டசபைக்கு வரவில்லை. இதனால் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மட்டும் சட்டசபையில் தனியாக அமர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜீரோ ஹவர்ஸில் எம்எல்ஏ-க்கள் தங்கள் தொகுதி பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப நேரம் ஒதுக்கப்பட்டது.

அப்போது பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ-வான வேல்முருகன் எழுந்து, அந்தியூர் - பவானி தொகுதிக்கு காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகனிடம் கோரிக்கை வைத்தார். அப்போது துரைமுருகன் எழுந்து, பிற தொகுதி கோரிக்கையை ஏன் கேட்கிறீர்கள்.. பிற தொகுதி கோரிக்கையை கேட்க அந்த தொகுதி எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இதனால் அமைச்சர் துரைமுருகன் மற்றும் வேல்முருகன் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக கூட்டணியில் இருக்கும் வேல்முருகன், இப்படி அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது முதல்முறையல்ல. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச்சுகள் எழுந்த போது, வேல்முருகன் சபாநாயகர் அருகே சென்று பேசுவதற்கு நேரம் கேட்டதும், அமைச்சர்கள் கூட்டலிட்டனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின், வேல்முருகனின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தார். அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களின் செயல்பாடுகள் மீது கூட டென்ஷனாகாத ஸ்டாலின், வேல்முருகனின் செயல்பாடுகளால் கோபமடைந்தார். தற்போது மீண்டும் பிற தொகுதிகளின் கோரிக்கையை எழுப்பி துரைமுருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பது விமர்சனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications