கோவை நண்பர் சேரலாதனிடம் சர்ச்சைக்குரிய ரஃபேல் வாட்ச் வாங்கினேன்: அண்ணாமலை
சென்னை: தாம் கையில் கட்டிக் கொண்டிருக்கும் ரஃபேல் வாட்ச்சை கோவை நண்பர் சேரலாதனிடம் வாங்கியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளும் திமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் அண்ணாமலை கட்டியிருந்த ரஃபேல் வாட்ச் விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது. ரஃபேல் வாட்ச் குறித்தும் அதை வாங்கியது குறித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதனையடுத்து தாம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் போகிறேன்; அப்போது ரஃபேல் வாட்ச் ரசீதை வெளியிடுவேன் என்றார். பின்னர் ஏப்ரல் 14-ந் தேதி ரஃபேல் வாட்ச் ரசீதையும் வெளியிடுவேன்; திமுக தலைவர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என கூறினார்.
இதனால் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் விவகாரம் சற்று ஓய்ந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரஃபேல் வாட்ச் பில்லை இப்போதாவது அண்ணாமலை வெளியிடுவாரா? என சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து நேற்று தமது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார் அண்ணாமலை. அதில், DMK Files என்ற தலைப்பில் ஒரு வீடியோ மட்டும் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் 17 திமுக பிரமுகர்களின் சொத்து, ஊழல் விவரங்களை அண்ணாமலை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார்.
இந்த சந்தீப்பின் போது தமது கையில் கட்டி இருக்கும் ரஃபேல் வாட்ச் பில்லுக்கான் ஆதாரத்தை அண்ணாமலை வெளியிட்டார். அப்போது, என் வீட்டு வாடகையை நண்பர்கள்தான் செலுத்துகின்றனர். இந்தியாவில் மொத்தம் 2 பேரிடம் ரஃபேல் வாட்சுகள் உள்ளன. அதில் ஒன்று என்னிடம் இருக்கிறது. கோவையை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணனிடம் இருந்து ரஃபேல் வாட்ச் வாங்கினேன் என்றார் அண்ணாமலை.


Click it and Unblock the Notifications
