ஆளுநரை நீக்க சட்டசபைக்கும் இம்பீச்மெண்ட் அதிகாரம்..முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சால் அதிர்ந்த சட்டசபை!
சென்னை: ஆளுநரை நீக்க சட்டசபைகளுக்கும் இம்பீச்மென்ட் அதிகாரம் தேவை என நாட்டில் விவாதம் நடைபெற்றதை தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசிய பேச்சுக்கு எம்.எல்.ஏக்கள் மேஜயை தட்டி சட்டசபை அதிரும் வகையில் வரவேற்பு தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆற்றிய உரை முழுமையாக:

"இந்த ஆண்டு "ஆளுநர் உரை" கூட்டத்தொடர் நடத்தி முடிக்கப்பட்டு, இன்னும் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கை தொடர்பான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவதற்குள், இரண்டாவது முறையாக ஆளுநர் பற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய விரும்பத்தகாத ஒரு சூழலை, இந்த அரசு உருவாக்கவில்லை. ஆனால் ஆளுநர் அவர்கள், அரசியல் சட்டத்தையும் கடந்து, ஓர் அரசியல் கட்சியின் கண்ணோட்டத்துடன் செயல்படுவதால் இப்படியொரு தீர்மானத்தை இரண்டாவது முறையாக நான் முன்மொழிய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்தியாவில் கூட்டாட்சியை உருவாக்கவும், சுயாட்சிக் கொண்டவையாய் மாநிலங்களை மலர வைக்கவும், திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணிப் படையாகச் செயல்படும் என்று தலைநகர் டெல்லியில் வைத்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதை இம்மாமன்றத்தில் நானும் வழிமொழிகிறேன். இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்; அதனை உணர்த்துவதற்கான நாளாக இது அமைந்துள்ளது. ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறிய போதிலும், அதை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழிமொழிந்த போதிலும், அந்தப் பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையைக் கொடுக்க அவர்கள் முதலமைச்சர்களாக இருந்த நேரத்தில் தவறியதில்லை. அவர்களது வழியைப் பின்பற்றி நானும் அதிலிருந்து இம்மியளவும் விலகியதில்லை; இந்த அரசும் தவறியதில்லை. அனுமந்தய்யா நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் 1969-ல், "கட்சி அரசியல் வேறுபாடு மற்றும் ஒருதலைபட்சமான செயல்பாடுகளின்றி, நம்பிக்கை வைக்கக் கூடியவராக ஆளுநர் இருக்க வேண்டும்" என்று கூறியது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நியமித்து, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான "ராஜமன்னார் குழு" ஒன்றிய-மாநில அரசு உறவுகள் பற்றி அளித்த அறிக்கையில், "ஆளுநர் பதவியை ஒழிக்க மிக உகந்த தருணம் இது" என்று பரிந்துரைத்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இதே மாமன்றத்தில் அந்த அறிக்கை மற்றும் பரிந்துரைகள் 5 நாட்கள் விவாதிக்கப்பட்டு, மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது வரலாறு. ஒன்றிய அரசு-மாநில அரசு உறவுகள் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையிலான கமிஷன், "ஆளுநர் என்பவர் பற்றற்ற அடையாளம் உள்ளவராக" (Governor should be a Detached figure) இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ரசியல் சட்டத்தை மறு ஆய்வு செய்யப் பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள் 2000-ஆம் ஆண்டு நியமித்த உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலய்யா அறிக்கையும் இதே கருத்தையே வலியுறுத்தியது. இன்னும் சொல்லப்போனால், குடியரசுத் தலைவரைப் பதவி நீக்க "இம்பீச்மென்ட்" அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இருப்பது போல, ஆளுநர்களை நீக்க சட்டமன்றத்திற்கும் "இம்பீச்மென்ட்" அதிகாரம் வழங்கலாமா என ஒரு கலந்தாலோசனையையே (Consultation Paper) அப்போது வெளியிட்டு, கருத்து கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் சட்டத்தின் தந்தை என நம் அனைவராலும் போற்றப்படும் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், "ஆளுநர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாத அரசியல் சட்ட ஆளுநராகச் செயல்பட வேண்டும்" என்பதை அரசியல் நிர்ணய சபையிலேயே வலியுறுத்தியிருக்கிறார்.

2010-இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, "ஆளுநர் நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் அரசியல் சட்டத்திற்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் கட்சிக்கு அல்ல" என்று "பி.பி. சிங்கால்" வழக்கில் மிகத் தெளிவாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அந்த அரசு உள்ள மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராகவும், நண்பராகவும் ஆளுநர் இருக்க வேண்டும்" என்று எத்தனையோ உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நமது ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் "நண்பராக" இருப்பதற்குத் தயாராக இல்லை என்பதை அவர் பதவியேற்றதிலிருந்து செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்தி வருகிறது.ஆளுநர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல. இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, இந்தச் சட்டமன்றத்தின் இறையாண்மையை, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களைக் கொச்சைப்படுத்தி பொதுவெளியில் பேசுகிறார். அவர் ஆளுநர் என்ற நிலையைத் தாண்டி அரசியல்வாதியாகப் பேசுகிறார். அந்தப் பதவிக்கு என்னென்ன தகுதிகளைச் சர்க்காரியா அறிக்கை வரையறுத்துக் கூறியுள்ளதோ, அந்தத் தகுதிகளையெல்லாம் மறந்துவிட்டுப் பேசுகிறார்.
அதுவும் குறிப்பாக, பிரதமர் அவர்கள் தமிழ்நாடு வரும்போதோ அல்லது பிரதமரைச் சந்திக்க நான் டெல்லி செல்லும்போதோ, தமிழ்நாட்டு அரசுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்யும் மசோதாவை இந்த அவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும், இளைஞர்கள் தற்கொலைகள் தொடரும் நிலையில் கூட அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். அதற்கு மேல் சென்று, "withhold" என்றால் நிராகரிக்கப்பட்டதாகப் பொருள் என்று ஆளுநர் விதண்டாவாதமாக பேசுகிறார். இந்த "withhold" அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கவே கூடாது என்று சர்க்காரியா அறிக்கை கூறியதைக் கூட அறியாதவர் போல் பேசுகிறார். அரசியல் சட்டப் பிரிவு 200-இன்கீழ் "ஆளுநரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவைச் சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிவிட்டால், அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழி ஆளுநருக்கு இல்லை" என்பதே தெளிவு.அதைவிட ஒரு மசோதாவை திருப்பி அனுப்ப வேண்டுமென்றால், அதைக்கூட அமைச்சரவையின் அறிவுரைப்படியே ஆளுநர் செய்ய வேண்டும் என்பதே அரசியல் நிர்ணய சபையில், இந்த அரசியல் சட்டப்பிரிவு குறித்து விவாதம் நடைபெற்ற போது சுட்டிக்காட்டப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள். சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றும் அதிகாரத்தை, மக்கள் பிரதிநிதிகள் அவையாக இருக்கக்கூடிய சட்டமன்றங்களுக்கு வழங்கிவிட்டு, அதற்கு ஒப்புதல் கையெழுத்து போடும் உரிமையை ஒரு நியமன ஆளுநருக்கு வழங்கியது மக்களாட்சி மாண்பு ஆகாது என்பதால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை நாம் எடுக்க வேண்டும் எனக் கருதுகிறேன். அரசியல் சட்டம் ஆளுநருக்குத் தெரியவில்லை என்று நான் கூறமாட்டேன். ஆனால் அவருக்கு இருக்க வேண்டிய "அரசியல் சட்ட விசுவாசத்தை", "அரசியல் விசுவாசம்" அப்படியே விழுங்கி விட்டது என்றே இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அதனால்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் மீறி, அரசின் அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவுகளை விமர்சித்துப் பொதுவெளியில் பேசுகிறார். அரசியல்சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள "மதச்சார்பின்மைக்கு" எதிராகப் பேசுகிறார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துகிறார். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்குக் குறுக்கே நிற்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தை, இறையாண்மை மிக்க இந்த நூற்றாண்டு வரலாறு கொண்ட சட்டமன்றத்தை அவமதிக்கிறார். நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம் என்ற நிலையில் ராஜ்பவனை "அரசியல் பவனாக" மாற்றிக் கொண்டிருக்கிறார். வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரை விமர்சிக்கிறோம் என்றால் அவரை தனிப்பட்ட முறையில் அல்ல; ஆளுநரின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறோம். ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு, பதிலுக்குப் பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக நான் மாற்ற விரும்பவில்லை. அதேநேரத்தில், சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால் அதனைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரசியல் நோக்கத்துக்காக, அரசியல் லாப நஷ்டங்களுக்காக, யாரோ சிலரின் விருப்பங்களுக்காக, நாம் இந்த அவையில் சட்டங்களை நிறைவேற்றுவது இல்லை. எடுத்தவுடன் சட்டம் போடுவதும் இல்லை. நீட் விலக்குச் சட்டமாக இருந்தாலும், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டமாக இருந்தாலும், எத்தனைக்கட்ட பரிசீலனைக்குப் பிறகு இவற்றை நிறைவேற்றினோம் என்பதை இந்த அவைக்கு விளக்கத் தேவையில்லை. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரைப்படி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதா என்பது ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மக்கள் கருத்து, வல்லுநர்கள் கருத்து, சட்டங்கள், தீர்ப்புகள், மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக்கூடிய உங்களுடைய கருத்துகள் இவை அனைத்தும் சேர்ந்துதான் உருவாக்குகிறோம். இப்படிப் பார்த்துப்பார்த்து உருவாக்கிய சட்டத்தை, தன்னுடைய விருப்பு வெறுப்பால் தடை போட்டுவிட்டு, உண்மைக்கு மாறான காரணங்களைச் சொல்லி மழுப்பி வந்தால், அதனை நம்பும் அளவுக்கு தமிழ்நாடு, ஏமாந்தவர்கள் இருக்கக்கூடிய மாநிலம் அல்ல! இந்த ஆண்டின் தொடக்கத்தில், அரசின் ஆளுநர் உரையில் இருந்த சில பகுதிகளை / சொற்களைத் தவிர்த்துவிட்டு ஆளுநர் உரையாற்றியதை திருத்துவதற்காகவும், அரசின் ஆளுநர் உரையை முழுமையாக பதிவு செய்வதற்காகவும், நானே முன்மொழிந்து இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் 9-1-2023 அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம். இன்று, இதே மாமன்றத்தில், உங்கள் முன் ஒரு தீர்மானத்தை மொழிகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
-
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப்












Click it and Unblock the Notifications