ரொம்ப கவனமா இருங்க.. "ஜேசுதாஸ்" தெரியுமா? மேயர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய அட்வைஸ்! என்னாச்சு?
சென்னை: சென்னையில் நடைபெற்ற மேயர், துணை மேயர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பல்வேறு முக்கியமான அறிவுரைகளை வழங்கினார்.
Recommended Video
தமிழ்நாட்டில் புதிதாக தேர்வான மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியம் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நேற்று முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு நிறைவு உரை நிகழ்த்தினார்.

மக்களாட்சிதான் முக்கியம்
முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், பயிற்சியில் பெற்ற அனுபவங்களை இங்கு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டும். நமக்கு மக்களாட்சிதான் முக்கியம். எப்போதெல்லாம் மக்களாட்சிக்கு ஊறு ஏற்பட்டதோ அப்போதெல்லாம் அதை திமுக கட்டி காத்து இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலை முறையாக, சரியாக குறிப்பிட்ட காலத்தில் நடத்தி காட்டி இருக்கிறோம். மக்களாட்சி தத்துவத்தை பின்பற்றி நடப்பதுதான் திமுக ஆட்சி. 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் வெற்றிகரமாக நடந்து உள்ளது.

மறைமுக தேர்தல்
மக்களால் இதற்கான உறுப்பினர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர். மறைமுக தேர்தல் மூலம் மேயர், துணை மேயர், சேர்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கு உறுப்பினர்கள் தேர்வாகி உள்ளனர். இப்படி தேர்தலில் வெற்றி பெற்று தேர்வான எல்லோருக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்ய அமைச்சர் கே. என் நேரு அவர்களை பாராட்டுகிறேன்.

சிறிய நன்மை
மக்களுக்கு சிறிய நன்மை செய்தாலும் அது பெரிய பாராட்டுகளை பெற்று தரும். மக்களுக்கு சிறிய தவறு செய்தாலும் அது பெரிய விளைவுகளை பெற்றுத்தரும். அதனால்தான் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி வருகிறேன். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக வைக்க வேண்டும்.

கவனமாக வைக்க வேண்டும்
மாநகராட்சி சட்டங்களையும், விதிமுறைகளையும் மதித்து நடக்க வேண்டும். மாமன்ற சட்ட விதிகளை பின்பற்றி எப்போதும் நடக்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சி நிர்வாகம் தற்சார்பு பொருளாதாரமாக இருக்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும். குடிசை பகுதிகளை மேம்படுத்துதல்.

கவனம் வேண்டும்
தனி நபர் மற்றும் சமுதாய கழிப்பிடம் அமைக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதை எல்லாம் கண்காணிக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. சட்டப்படி நடந்து, முறையாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் அடிப்படை வசதிகள் நல்ல முறையில் இருக்கிறதா என்று அடிக்கடி கவனிக்க வேண்டும். மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பது கவுன்சிலர்கள்தான்.

கவுன்சிலர்கள் முக்கியம்
ஒரு கட்சிக்கு கெட்ட பெயர் வருவதும், நல்ல பெயர் வருவதும் அந்த கட்சியின் கவுன்சிலர்கள் மூலம்தான். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் கோபாலபுரம் பகுதியில் கவுன்சிலராக இருந்த ஜேசுதாஸ் பற்றி பேசலாம். அவரை உங்களுக்கு தெரியுமா? அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். அவரை பற்றி நல்ல நியாபகம் இருக்கிறது. அங்கு அவர் நிற்கும் போதெல்லாம் மக்கள் வாக்கு அளிப்பார்கள்.

ஆயிரம் விளக்கு
ஆனால் அதே பகுதிக்கு உட்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் நானோ, முரசொலி மாறனோ நின்றால் வாக்களிக்க மாட்டார்கள். எங்கள் குடும்ப டாக்டர் கிருஷ்ணன் கூட இதை எங்களிடம் சொல்லி இருக்கிறார். நான் கவுன்சிலர் ஜேசுதாஸுக்கு வாக்கு அளித்தேன். உங்களுக்கு அளிக்கவில்லை என்று கூறி இருக்கிறார். அவர்தான் மக்களுடன் நெருக்கமாக இருக்கிறார். அதனால் வாக்களித்தேன் என்றார். ஜேசுதாஸ் தான் கவுன்சிலர்களுக்கு எடுத்துக்காட்டு.

கவுன்சிலர் ஜேசுதாஸ்
காலையிலேயே வெளியே வந்து மக்கள் பிரச்சனைகளை கவனிப்பது வரை இரவில் சாலை விளக்கு போடுவது வரை அனைத்தையும் கவுன்சிலர்கள் கவனிக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் கவனமாக நடக்க வேண்டும். மக்களோடு மக்களாக இருங்கள். உங்களுக்கான பொறுப்புகளை அறிந்து கொண்டு சட்டப்படி செயல்படுங்கள். மக்களிடம் நற்சேவைகள் மூலம் நன்மதிப்பை பெற்றிடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications