5 தமிழக காங்கிரஸ் சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு! கடலூரில் செம டிவிஸ்ட்! மாஜிக்கு கல்தா!
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் ஏற்கெனவே உள்ள சிட்டிங் எம்பிக்கள் 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக, திமுக, பாஜக, பாமக, தேமுதிக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியோ எந்த வேட்பாளரையும் அறிவிக்காமல் ஆலோசனையில் மட்டுமே ஈடுபட்டு வந்தது. தாமதத்திற்கு காரணம் என்னவென விசாரித்ததில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வெற்றி பெறும் எம்பிக்களாக அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வந்தன.

அந்த வகையில் நேற்றைய தினம் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளில் 7 தொகுதிகளின் வேட்பாளரை அறிவித்தது. அதிலும் புதுவை வேட்பாளர் வைத்திலிங்கத்தை நேற்று முன் தினமே அறிவித்தது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 7 வேட்பாளர்களில் 5 பேர் சிட்டிங் எம்பிக்கள் ஆவர்.
திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில்
கரூர்- ஜோதிமணி
விருதுநகர்- மாணிக்கம் தாகூர்
கடலூர்- விஷ்ணுபிரசாத்
சிவகங்கை- கார்த்தி சிதம்பரம்
கன்னியாகுமரி- விஜய் வசந்த்
கிருஷ்ணகிரி- கோபிநாத்
இவர்களில் அதே தொகுதியில் உள்ள சிட்டிங் எம்பிக்கள் 4 பேர் ஆவர். ஆரணி தொகுதியில் போட்டியிட்டிருந்த விஷ்ணு பிரசாத் இந்த முறை கடலூருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர்கள் குறித்த பயோவை பார்க்கலாம்.
கரூர்- ஜோதிமணி: இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்டவர் ஜோதிமணி. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான இளம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். 2011-ல் கரூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார் ஜோதிமணி. அத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட செந்தில் பாலாஜியிடம் தோல்வியைத் தழுவினார் ஜோதிமணி. 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக, அதிமுகவின் தம்பிதுரையை எதிர்த்துப் போட்டியிட்டார். அத்தேர்தலிலும் தோல்வியடைந்தார் ஜோதிமணி. ஆனால் 2019 லோக்சபா தேர்தலில் 63.06% வாக்குகளைப் பெற்று அதிமுகவின் தம்பிதுரையை வீழ்த்தினார். சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரையை தோற்கடித்தார் ஜோதிமணி.
விருதுநகர்- மாணிக்கம் தாகூர்: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கு மிக நெருக்கமானவர். பல்வேறு மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றியவர். தெலுங்கானாவில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சி அமைத்ததில் மாணிக்கம் தாகூரும் முக்கிய பங்கு வகித்தார். 2009-ம் ஆண்டு விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்பியானார். ஆனால் 2014-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார் மாணிக்கம் தாகூர். 2019-ல் மீண்டும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார்.
சிவகங்கை- கார்த்தி சிதம்பரம்: இந்திரா, ராஜீவ் காந்தி காலத்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு அதிமுகவின் செந்தில்நாதனிடம் தோல்வியடைந்தார் கார்த்தி சிதம்பரம். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வென்றார். மகன் கார்த்தி சிதம்பரம் லோக்சபா எம்பியாகவும் தந்தை ப.சிதம்பரம் ராஜ்யசபா எம்பியாகவும் பதவி வகிக்கின்றனர்.
கன்னியாகுமரி- விஜய் வசந்த்: பிரபல தொழிலதிபரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஹெச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த். திரைப்பட நடிகராக இருந்த விஜய் வசந்த் தந்தை வசந்தகுமார் மறைவால் அரசியலுக்கு வந்தார். 2021-ம் ஆண்டு கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று எம்பியானவர் விஜய் வசந்த்.
கடலூர்- விஷ்ணுபிரசாத்: இவர் ஆரணி மக்களவை தொகுதியின் எம்பியாக இருந்தார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர்களில் ஒருவர். இவர் காங்கிரசின் முன்னாள் தலைவரான கிருஷ்ணசாமியின் மகனும், பாமக இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனரும் ஆவார். இவரது சகோதரி சவுமியாவைதான் அன்புமணி திருமணம் செய்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் விஷ்ணு பிரசாத் 6.17 லட்சம் வாக்குகளை பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏழுமலை 3.86 லட்சம் வாக்குகளை பெற்றார். கடலூர் தொகுதி தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரிக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆரணி தொகுதி எம்பி விஷ்ணுபிரசாத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications