முழு பூசணியை சோற்றில் மறைக்கும் எடப்பாடி.. அதிமுக ஏன் தமாகாவுக்கு வாய்ப்பு கொடுக்கல? கே.எஸ்.அழகிரி!
திமுக கூட்டணி பற்றிய எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய கே.எஸ்.அழகிரி, அலட்சியப் போக்கோடு ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுக அபகரித்துக் கொண்டதாக விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஜனவரி 27ம் தேதி நடக்க உள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பாக மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் அதிமுக தரப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிமுகவே நேரடியாக களமிறங்கியது. அக்கட்சியின் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு களமிறக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களப் பிரச்சாரம் உச்சத்தில் உள்ளது. திமுக அமைச்சர்கள் தெரு தெருவாக களமிறங்கி ஒரு பக்கம் பிரச்சாரம் செய்ய, இன்னொரு பக்கம் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இபிஎஸ் விமர்சனம்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு உயர்த்தப்பட்ட பால் விலை, சொத்துவரி, மின் கட்டணம் ஆகியவை குறித்து திமுக கூட்டணி கட்சிகள், எதுவுமே பேசுவது இல்லை. அதற்காக குரல் கொடுப்பதும் இல்லை. ஏனென்றால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகள் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள் என எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சனம் செய்தார்.

கேஎஸ் அழகிரி பதிலடி
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி, அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. திமுக தலைமை காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கியது போல, இந்த இடைத் தேர்தலில் அதிமுக ஏன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவில்லை?

கூட்டணி தர்மத்திற்கு உலை
இதைவிட கூட்டணி தர்மத்திற்கு உலை வைக்கிற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. தமிழ் மாநில காங்கிரஸை ஒரு கட்சியாகவே கருதாமல் அலட்சியப் போக்கோடு ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுக அபகரித்துக் கொண்டுள்ளது. இதுதான் அதிமுக கூட்டணி கட்சிகளை நடத்துகிற விதம். இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை திமுக அடிமைப்படுத்திகிறது என்று ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரக் கூட்டத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

காலில் விழுந்து பதவி பெற்றவர்கள்
திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை மிகுந்த சுயமரியாதையோடு, சுய சிந்தனையோடு செயல்பட்டு வருகிறோம். ஆனால், அதிமுகவை பொறுத்தவரை யார் காலில் விழுந்து, எப்படி பதவி பெற்றார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். இத்தகைய அடிமைத்தன அரசியல் நடத்தியவர்கள் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications