'இந்தாங்கம்மா உங்க பட்டா'.. வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கிய அமைச்சர்.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆவடி
சென்னை: திருமுல்லைவாயல் பகுதியில் பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வீடு வீடாக சென்று பட்டா வழங்கினார். அமைச்சர் ஒருவரே நேரடியாக வீட்டுக்கு சென்று வீட்டுமனை பட்டா வழங்கியது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தை முன்னெடுத்து ஒவ்வொரு தொகுதியிலும் மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றார் மு.க.ஸ்டாலின்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்
'தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அந்த மனுக்கள் மீது 100 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மக்களுக்கு அவர் வாக்குறுதி கொடுத்து இருந்தார். இதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்னும் திட்டத்தை உருவாக்கி அதனை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

வீட்டுமனை பட்டா
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறுவதற்காக தனி துறை அமைக்கப்பட்டு, இதனை கண்காணிக்க தனி ஐ.ஏ.எஸ் அதிகாரியும் நியமிக்கப்பட்டார். இந்த திட்டத்தில் பட்டா கேட்டு ஏராளமானோர் விண்னப்பித்தனர். அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருமுல்லைவாயலில் நடைபெற்றது.

நேரடியாக சென்ற அமைச்சர்
8-வது வார்டு பகுதியில் 20 பயனாளிகளுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மேடைக்கு வராமல் நேரடியாக பட்டா கொடுக்க வேண்டிய பொதுமக்களின் பகுதிகளுக்கு சென்றார். மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், ஆவடி வட்டாட்சியர் செல்வம், தனி வட்டாட்சியர் வில்சன் ஆகியோர் அமைச்சருடன் உடன் சென்றனர்.

மக்கள் பார்த்து
20 பயனாளிகளின் வீடுகளுக்கு சென்ற அமைச்சர் சா.மு.நாசர் நேரடியாக அவர்களிடம் வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். வீட்டு மனை பட்டா பெற வேண்டுமானால் அதிகாரிகளை தேடி தினம், தினம் அலைய வேண்டும். பல நாட்கள் பொறுமையாக இருந்தால்தான் பட்டா கிடைக்கும். இப்படிப்பட்ட காலத்தில் அமைச்சர் ஒருவரே நேரடியாக வீட்டுக்கு சென்று பட்டாமனை வழங்கியது பட்டா பெற்றவர்களை மட்டுமின்றி அந்த பகுதி மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications