சாந்தனால் நகர கூட முடியவில்லை.. ஏர் ஆம்புலன்ஸ் வந்த போது திடீர்னு ஹார்ட் அட்டாக்.. தமிழக அரசு பதில்
சென்னை: சாந்தனை இலங்கைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்ப தயாராக இருந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தற்போது அவரது உடலை இலங்கைக்கு அனுப்ப அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் துரதிருஷ்டவசமாக நேற்று உயிரிழந்துவிட்டதாக கூறினார்.
சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி எப்போது கிடைத்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், கடந்த 22ம் தேதி அவரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக கூறினார்.
சாந்தனை இலங்கைக்கு அனுப்ப 22ம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அனுப்பவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஜனவரி 24ம் தேதி முதலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரால் நகர கூட முடியவில்லை என தெரிவித்தார்.
ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்
அதற்கான டிக்கெட்டும் எடுக்கப்பட்டிருந்ததாகவும்,
ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சுட்டி காட்டினார்.
அப்போது சாந்தனின் மருத்துவ அறிக்கைகளையும் நீதிபதிகளிடம் சமர்பித்தார். மேலும் சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருவதாக குறிப்பிட்டார்.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலுசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ் சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல தூதரக அனுமதி ஆவணம் உட்பட அனைத்து ஆவணங்களும் உடனடியாக வழங்கப்படும் என தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழக அரசு உரிய ஆவணங்களை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்.
தூதரக சான்றிதழ்களை வழங்க உரிய ஆவணங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகள் ,பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இதற்கான நோடல் அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டு இது குறித்து அறிக்கையை வரும் 4ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications