உதயமாக போகிறது.. தமிழகத்தில் புதிய மாநகராட்சி, நகராட்சிகள்.. அமைச்சர் கே.என்.நேரு சூப்பர் தகவல்
சென்னை: புதிய மாநகராட்சி, நகராட்சிகள் உதயமாக போகிறது.. நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கே.என்.நேரு இது தொடர்பாக அவர் கூறும் போது, தமிழகத்தில் புதிதாக எத்தனை மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கப்படும் என்பதை முதல்வர் தான் அறிவிப்பார் என்று கூறினார்.
தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன், அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாக அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் மொத்தம் 148 நகராட்சிகள் உள்ளன.

தமிழக அரசு திட்டம்
இந்நிலையில் ஒரு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட அந்த பேரூராட்சியில் 30 ஆயிரம் அல்லது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 33 பேரூராட்சிகள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகையை பெற்றிருப்பதால் அந்த பேரூராட்சிகள் அனைத்தையும் நகராட்சிகளாக தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

நகராட்சிகளாகிறது
எந்தெந்நத மாவட்டத்தில் எந்த பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறித்த பட்டியலும் வெளியானது. அந்த பட்டியலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், மாங்காடு, செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம், கூடுவாஞ்சேரி, திருநீர்மலை, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர். திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி. கடலூர் மாவட்டத்தில் வடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கோட்டக்குப்பம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோழிங்கர். சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, தாரமங்கலம், இடங்கனசாலை. கரூர் மாவட்டத்தில் பள்ளப்பட்டி. ஈரோடு மாவட்டத்தில் 'பெருந்துறை-கருமாண்டி செல்லிபாளையம்', திருப்பூர் மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி, அவினாசி, கோவை மாவட்டத்தில் கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை. நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, தஞ்சை மாவட்டத்தில் அதிராமபட்டினம், தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம். சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், நெல்லை மாவட்டத்தில் களக்காடு, பணகுடி, வடக்கு வள்ளியூர், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொள்ளங்கோடு ஆகிய 33 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இந்த செய்திகளை அரசு மறுக்கவில்லை. அதேநேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

சென்னை மாநகராட்சி
இந்நிலையில் நகர்ப்புற மேம்பாட்டுதுறை அமைச்சர் கே.என்.நேரு சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறும் போது, சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் இருக்கிறது. இதில் 80 லட்சம் பேர் இருக்கின்றனர். அதேபோல் ஒவ்வொரு மாநகராட்சியிலும் எவ்வளவு வட்டங்கள் இருக்கிறது. அந்த வட்டங்களில் சம அளவு வாக்குகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
Recommended Video

வாக்காளர்கள்
மத்திய தேர்தல் ஆணையம் ஒரு சட்டமன்ற தொகுதியில் என்றால் 180000 முதல் 2லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர் வரை இருக்கலாம். சில சட்டமன்ற தொகுதியில் 4லட்சம் வாக்காளர்கள் கூட இருந்தார்கள். அதேபோல் மாநகராட்சி வார்டில் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் வாக்காளர்கள் இருக்க வேண்டும். ஊருக்கு தகுந்தமாதிரி பிரித்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் தகவல்
திமுகவின் தேர்தல் அறிக்கையில் புதிய மாநகராட்சி, நகராட்சி உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக எத்தனை மாநகராடசிகள், நகராட்சிகள் உருவாக்கப்படும் என்பதை முதல்வர் ஸ்டாலின் தான் அறிவிப்பார் " இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்












Click it and Unblock the Notifications