அனைத்து சாதியினரும் அர்ச்சகர்..யாரும் பாதிக்கப்படவில்லை,யாருக்கும் முன்னுரிமையும் இல்லை-அறநிலைய துறை
சென்னை: நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுவதாகவும் விதிகளை மீறி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதாகக் கருதும் விண்ணப்பதாரர்கள் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அல்லது துணை ஆணையர் அணுகி முறையிடலாம் என்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் விவகாரத்தில் அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது.
அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியது ஆகம விதிகளுக்கு முரணானது எனக் கூறி, குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்க வேண்டும் எனவும், ஆகம விதிகளை மீறி தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது எனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஸ்ரீதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆகம விதிமுறைகளை மீறி அர்ச்சகரை நியமிக்கும் 38 கோவில்களின் அறிவிப்பாணைகளை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தமிழ்நாடு அரசு நியமிக்கவில்லை
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜி.ஜெயப்பிரியாவின் பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அந்த பதில் மனுவில், அந்தந்த கோவில் செயல் அலுவலர்களால் மட்டுமே அர்ச்சகர் நியமன நடைமுறைகள் நடைபெறுவதைப் புரிந்து கொள்ளாமல், தமிழ்நாடு அரசு நியமிப்பதாக அனுமானித்துத் தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

முறையான நடைமுறை
கோவில்களில் காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டுமெனக் கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை பின்பற்றியே, கோவில் செயல் அலுவலர்கள் இந்த நியமன நடைமுறைகளை நடத்துவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர்களை நியமிப்பதற்கான தகுதிகள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் பரிந்துரையின் அடிப்படையிலேயே ஒரு வருடப் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரும் பாதிக்கப்படவில்லை
இந்த தகுதியின் அடிப்படையில் விளம்பரத்தின் மூலம் மனுதாரரை அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர்களும் விண்ணப்பிப்பதற்கு எந்தவித தடையும் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். தமிழக அரசு பல்வேறு கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் பல்வேறு பயிற்சி மையங்கள் அமைத்து பயிற்சி பெற்றவர்களைக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமித்துள்ளதாகவும், மனுதாரர் குறிப்பிட்ட 37 கோயில்களில் 19 கோயில்களுக்குத் தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்காததால், யாரும் நியமிக்கப்படவில்லை எனப் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னுரிமை இல்லை
இதுவரை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பணியாளர் விதிப்படி, பல்வேறு கோயில்களில் தகுதி வாய்ந்த 58 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சில கோயில்களில் அர்ச்சகர்கள் ஓய்வு பெற்ற நிலையிலும் நிரப்பப்படாமல் உள்ளதால், ஓய்வு பெற்றவர்களையே தொடர்ந்து பணி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத் துறை பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும், பாடசாலையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இணையாகவே கருதப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

புகார் அளிக்கலாம்
விதிகளை மீறி நியமிக்கப்பட்டதாகக் கருதும் விண்ணப்பதாரர்கள், நீதிமன்றத்தை நாடாமலேயே இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அல்லது துணை ஆணையர் அணுகி நியமனம் தொடர்பாக முறையிடலாம் என்ற விதி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தைப் பின்பற்றியே அர்ச்சகர் நியமனங்கள் இருப்பதால் மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications