"ஆன்லைன் ரம்மி.. நாங்கள் ஏன் புதிய சட்டம் கொண்டு வரவில்லை தெரியுமா!" அமைச்சர் ரகுபதி புது விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், இதைத் தடுக்கும் வகையில் ஏன் இதுவரை சட்டம் இயற்றவில்லை என்பது குறித்து அமைச்சர் ரகுபதி முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் என்பது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. முதலில் பொழுது போக்காக இதில் விளையாடத் தொடங்கும் பலரும் தங்கள் மொத்த சேமிப்பை இதில் இழக்கும் அபாயமும் உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது பெரிய சமூக பிரச்சினையாக உருவெடுக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியிலேயே தமிழக சட்டசபையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், நீதிமன்றம் அந்தச் சட்டத்தை ரத்து செய்ததால், மீண்டும் மாநிலத்தில் ஆன்லைன் ரம்மி என்ற விஷம் பரவ தொடங்கிவிட்டது. இதையடுத்து ஆன்லைன் ரம்மியை தடை செய்ய புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உட்படப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

திமுக நிகழ்ச்சி
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாள் நேற்று அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அரசு சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதேபோல திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நலத்திட்டப் பணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு திமுக சார்பில் மோதிரம் அணிவிக்கப்பட்டது.

அமைச்சர் ரகுபதி
இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு மோதிரங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, "அதிமுகவை காட்டிலும் திமுகவுக்குப் பொதுமக்கள் மீது அதிக அக்கறை உள்ளது. எனவே, மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எங்களுக்கு கற்று தர தேவையில்லை.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் மோசமான சட்டம் இயற்றப்பட்டு இருந்தது. அதன் காரணமாகவே நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்து இருந்தது. இப்போது உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் மேல்முறையீடு செய்துள்ளோம். இதில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதன் காரணமாகவே நாங்கள் புதிய சட்டத்தை இயற்றவில்லை. மேலும், மாநிலத்தில் எங்கெல்லாம் சூதாட்டம் நடக்கிறதோ அங்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கிறார்கள். சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
Recommended Video

குட்கா & கஞ்சா
கடந்த ஆட்சியில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனை எந்தளவுக்கு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். டைரியில் இருந்த பெயர்களுக்கு எவ்வளவு ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. என்றும் அனைவருக்கும் தெரியும். வெளி மாநிலங்களில் கடத்தி வரப்படும் கஞ்சா, குட்கா பொருட்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

அண்ணாமலைக்குப் பதிலடி
தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை வெளியிட உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாகக் குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ரகுபதி, "எங்கள் மடியில் கனமில்லை.. எனவே, எங்களுக்கு எந்தவொரு பயமும் இல்லை" என்று பதிலடி கொடுத்துள்ளார்,












Click it and Unblock the Notifications