உங்க உத்தரவையே மீறிட்டாங்க.. ராஜினாமா பண்ண சொல்லுங்க! விசிக இடத்தில் வென்ற திமுக.. "பாய்ந்த" திருமா
சென்னை: கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்று விசிக எம்பி திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி மறைமுக தேர்தல் நடைபெற்றது. கோவை, சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சி மேயர்கள், துணை மேயர் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர். ஆங்காங்கே சில மோதல்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் எங்கும் கலவரம் இன்றி வாக்கெடுப்பு நடந்தது.
இந்த மறைமுக தேர்தல் வாக்கெடுப்பில் பல்வேறு நகராட்சி, பேரூராட்சிகளில் கூட்டணி கட்சிகள் வெல்ல வேண்டிய இடங்களில் திமுகவினர் வெற்றிபெற்றுள்ளனர். காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சியினர் இடையே இது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

விசிக
இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடலூர் துணை மேயர் பதவி திமுக மூலம் வழங்கப்பட்டது. 2 நகராட்சி தலைவர் பதவிகள், 3 நகராட்சி துணை தலைவர் பதவி, 3 பேரூராட்சி தலைவர் பதவிகள் விசிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகள் விசிகவுக்கு திமுக ஒதுக்கி உள்ளது.

துணை மேயர்
விசிகவிற்கு துணை மேயர் பதவி கடலூர் மாநகராட்சியில் வழங்கப்பட்டது. அதேபோல் நகராட்சி தலைவர் பதவி ஜெயங்கொண்டம் - அரியலூர் மாவட்டம்., நெல்லிக்குப்பம் - கடலூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் வழங்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் பதவி பெண்ணாடம் - கடலூர் மாவட்டம், காடையாம்பட்டி - சேலம் மாவட்டம்., பொ.மல்லாபுரம் - தருமபுரி மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் வழங்கப்பட்டது.

மறைமுக தேர்தல்
இந்த நிலையில்தான் மறைமுக தேர்தல் வாக்கெடுப்பில் பல்வேறு நகராட்சி, பேரூராட்சிகளில் கூட்டணி கட்சிகள் வெல்ல வேண்டிய இடங்களில் திமுகவினர் வெற்றிபெற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுகவினர் பிடித்துள்ளனர். முக்கியமாக காங்கிரஸ் விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.

திமுக அத்துமீறல்
அதன்படி தருமபுரி பொ. மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் சாந்தி புஷ்பராஜ் வெற்றிபெற்றார். இந்த பேரூராட்சி தலைவர் பதவி விசிகவிற்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. மேலும் நெல்லைக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட விசிக வேட்பாளர் கிரிஜாவை வீழ்த்தி திமுகவை சேர்ந்த ஜெயந்தி வெற்றி பெற்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டணி தர்மம்
இப்படி விசிகவிற்கு வழங்கப்பட்ட பதவிக்கு பல்வேறு இடங்களில் திமுகவினர் மூலம் பிடுங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் போட்டியிட்டு வெற்றிபெற்றது தெரிந்து முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் பல மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக நிர்வாகிகள் இப்படி செய்தது ஏன்? இனி இதில் என்ன முடிவு எடுக்கலாம், பதவி ஏற்றவர்களை ராஜினாமா செய்ய சொல்லலாமா என்று இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்து உள்ளனர்.

கோரிக்கை
இந்த சம்பவங்களுக்கு விசிக தலைவர் எம்பி திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், முதல்வர் ஸ்டாலின் ஆணையையும் மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை 'ராஜினாமா' செய்ய வைத்து 'கூட்டணி அறத்தைக்' காத்திட வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன், என்று கோரிக்கை விடுத்துள்ளார். திமுக உறுப்பினர்களை கண்டித்து விசிகவினர் இன்று பல இடங்களில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications