கை ரிக்ஷா ஒழிப்பின் நீட்சி.. உருகிய வசந்தபாலன்.. தேசிய அளவில் ஹிட்டடித்த தமிழ்நாடு அரசின் அறிவிப்பு
சென்னை: கடைகளில் நின்று வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு கட்டாயமாக இருக்கைகள் வழங்குவதற்கான சட்ட திருத்த வரவு முன் முடிவை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று அவையில் வெளியிட்டார். தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
சமூக நீதி, சமூக முன்னேற்றம் தொடர்பான திட்டங்களிலும், அறிவிப்புகளிலும் தமிழ்நாடு எப்போதுமே பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது. சுகாதாரம், மொழி உரிமை, சமத்துவம், சமூக நீதி என்று ஒவ்வொரு துறைகளிலும் தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகள், முதல்வர்கள் பல குறிப்பிடத்தகுந்த திட்டங்களை, சட்டங்களை கொண்டு வந்தது வரலாறு.
இந்தியாவில் மற்ற மாநிலங்கள் சுதந்திரத்திற்கு பின் மண்டியிட்டுக்கொண்டு இருந்த போது தமிழ்நாடு அப்போதே எழுந்து நடக்க தொடங்கிவிட்டது. அடித்தட்டு மக்களை மேலே கொண்டு வருவதற்கான இலவச அரிசி, பஸ்பாஸ், சைக்கிள் தொடங்கி அம்மா உணவகம், இலவச கணினி, பெண்களுக்கான இலவச மாநகர பேருந்து வரை எல்லாமே மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்த திட்டங்கள் ஆகும்.

இருக்கைகள்
மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திட்டங்களை வகுத்த தமிழ்நாடு நேற்று அறிவித்த இன்னொரு முக்கியமான திட்டம்தான் ஊழியர்களுக்கான இருக்கைகள் திட்டம். கடைகளில் நின்று வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு கட்டாயமாக இருக்கைகள் வழங்குவதற்கான சட்ட திருத்த வரவு முன் முடிவை நேற்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவையில் வெளியிட்டார். கடைகளில் பணியாளர்கள் நாள் முழுக்க இருக்கைகள் இன்றி நின்றபடி வேலை செய்வதை பற்றி பலர் பல இடங்களில் பேசி உள்ளனர், எழுதி உள்ளனர்.

கிடைத்த இருக்கை
நாள் முழுக்க ஒரு பணியாளர் நின்று கொண்டே இருப்பது உழைப்பு சுரண்டல். மனித உரிமைக்கு எதிரான அதிகார மீறல் என்று பலர் இந்த பழக்கத்திற்கு எதிராக கடக்கும் கண்டனங்களையும் தெரிவித்து உள்ளனர். முக்கியமாக சென்னையில் தி நகரில் இருக்கும் பெரிய துணி கடைகளில் நாள் முழுக்க ஊழியர்கள் கால் கடுக்க நிற்பது, 12 மணி நேரம் நின்றபடியே கஸ்டமர்களை கவனிப்பது என்று பெரிய உழைப்பு சுரண்டலே இத்தனை வருடமாக நடைபெற்று வந்தது. இதற்கு எதிராக பலர் குரல் கொடுத்து வந்தும் இந்த சமூக அவலம் மட்டும் மாறவே இல்லை.

பல மாடிகள்
பல மாடிகளில் அலங்காரத்தோடு துணி கடைகள் திறக்கப்பட்டாலும் அவர்களுக்கு இருக்கைகள் வழங்க மட்டும் ஓனர்களுக்கு மனமே வரவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு கடைகளில் ஊழியர்களுக்கு இருக்கைகள் வழங்கும் சட்ட திருத்தத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்து இருக்கிறார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல தேசிய அளவிலும் இந்த சட்டம் கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் டெல்லி, கர்நாடகா, போன்ற அனைத்து பகுதிகளிலும் பெரிய கடைகளில், முக்கியமாக துணி மற்றும் நகை கடைகளில் ஊழியர்களுக்கு இருக்கைகள் வழங்கப்படுவது கிடையாது.

அறிவிப்பு வைரல்
இதனால்தான் நேற்று முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை தேசிய அளவில் ஊடகங்கள் பெரிய அளவில் பேசியது. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. பல மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய திட்டம் இது என்று சமூக ஊடகங்களில் பலர் கோரிக்கை வைக்கும் அளவிற்கு இந்த திட்டம் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 3.6.1973 அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதி கை ரிக்சாக்கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டி கைரிக் சா உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி கொடுத்தார்.

கை ரிக்சா
இந்தியாவில் இது மிகப்பெரிய முன்னோடி அறிவிப்பாக இந்த திட்டம் பார்க்கப்பட்டது. இப்போதும் கூட மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இதேபோன்ற கை ரிக்சாக்கள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இன்னும் பல மாநிலங்கள் தமிழ்நாடு தொட்ட அந்த சமூக நீதி இலக்கையே தொடாத நிலையில்தான் தமிழ்நாடு அரசு கடைகளில் ஊழியர்களுக்கு இருக்கை வழங்கும் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இணையத்தில் பலரும் இந்த அறிவிப்பை வரவேற்று உள்ள நிலையில் அங்காடித்தெரு பட இயக்குனர் வசந்தபாலனும் இந்த முடிவை வரவேற்று உள்ளார்.

அங்காடித்தெரு
துணி கடைகளில் ஊழியர்கள் படும் கஷ்டங்களை அங்காடித்தெரு படமாக வசந்தபாலன் எடுத்து இருந்தனர். இந்த நிலையில் நேற்றைய அறிவிப்பை வரவேற்ற வசந்தபாலன், தமிழ்நாடு அரசுக்கு நன்றி. என் அங்காடி தெரு திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது. அங்காடிதெரு படத்தில் தொடர்ந்து நின்றபடி வேலை செய்வதால் ஏற்படும் வெரிகோஸ் நோய் பற்றி பேசி இருப்பேன்.. இப்போது அதற்கு விடிவு பிறந்திருக்கிறது, என்று பாராட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications