உங்க சிரிப்பை பார்த்தாலே.. உடல்சோர்வு, உள்ளசோர்வு எல்லாம் பறந்து போகுது! நெகிழ்ந்துபோன அன்பில் மகேஷ்
சென்னை: திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சில நெகிழ்ச்சியான கருத்துகளைத் தெரிவித்தார்.
Recommended Video
திருச்சியில் திருவெறும்பூர் தொகுதியில் இருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராகவும் உள்ளார்.
பள்ளிக் கல்வி துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது சொந்த தொகுதியிலும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து வருகிறார்.

திருச்சி திருவெறும்பூர்
அதன்படி திருச்சி திருவெறும்பூரில் செந்தண்ணீர்ப்புரம் பகுதி மக்கள் தங்களுக்கு புதிய பேருந்து நிறுத்தத்தைக் கட்டி தர வேண்டும் என்று சில காலமாகவே கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடக்கப்பட்டன.

பாராட்டுகிறார்கள்
ரூ.12 லட்சம் மதிப்பில் நடைபெற்று வந்த இந்தப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த புதிய பேருந்து நிறுத்தத்தை அண்ணா நகர்ப் பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் பல இடங்களுக்குச் செல்லும் போதும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் எனது செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

காரணம் நீங்கள் தான்
ஆனால், இந்த பாராட்டுக்கு எல்லாம் காரணம் நான் இல்லை. இந்த முழு சாதனையும் என்னை இரண்டாவது முறையாக சுமார் 49 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த உங்களைத்தான் சேரும். நமது தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, உடல் சோர்வு, மனச்சோர்வு எல்லாம் பறந்துவிடுகிறது.

பறந்து போகிறது
உங்கள் முகத்தில் இருக்கும் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் பார்க்கும்போது, எனது உடல் சோர்வும் உள்ளச்சோர்வும் பறந்தோடிப் போகிறது" என்று கூறி நெகிழ்ந்து போனார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர் லீலா வேலு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

திடீர் ஆய்வு
அதைத் தொடர்ந்து சேலம் வந்த அமைச்சர் அன்பில் மகேஷ், சேலம் ஏற்காட்டில் பள்ளியில் ஆய்வு செய்தார். சேலம் மாவட்டம் ஏற்காடு மலைக் கிராமத்தில் உள்ள புளியங்கடை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அந்த பள்ளிக்குத் தேவையான வசதிகள் மற்றும் அடிப்படைத் தேவைகளை அமைச்சர் கேட்டு அறிந்தார்.












Click it and Unblock the Notifications