கோயில்களில் இருக்கும் கடவுள்களுக்கும் தமிழ் தான் பிடிக்கும்.. தமிழில் அர்ச்சனை! சொல்கிறார் எ.வ.வேலு
சென்னை: துறைமுகம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு பல்வேறு விவகாரங்கள் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசினார்.
தமிழ்நாட்டில் சிறிதும் பெரியதுமாக மொத்தம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அதில் 800க்கும் மேற்பட்ட கோயில்கள் குறைந்தது 200 ஆண்டுகள் பழமையானதாகும்.
இந்த கோயில்களுக்கு சொந்தமாக இருக்கும் நிலங்கள் பல ஆண்டுகளாகவே ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

கோயில்கள்
இந்நிலையில், கடந்த சில மாதங்களாவே அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்த கோயில்கள் நிலங்கள் மீட்கப்படும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில மாதங்களில் மட்டும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

அறநிலையத்துறை
மேலும், அண்ணை தமிழில் அர்ச்சனை போன்ற திட்டங்களும் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்நிலையில், சென்னை துறைமுகம் எம்எல்ஏ அலுவலகத்தில் மூன்று சீர்திருத்த திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இந்த சீர்திருத்த திருமணங்களை நடத்தி வைத்தனர்.

திராவிட மாடல்
திருமண நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை கொடுத்து வருவதாக தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சி என்றால் வேறு எதுவும் இல்லை நம்மவர்களின் ஆட்சி என்றே பொருள் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், மந்திரம் என்பது சமஸ்கிருதம் என்று குறிப்பிட்ட அவர், திராவிட திருமணம் என்றால் தான் தமிழ் திருமணம் என்றும் விளக்கினார்.

புரியாது
சமஸ்கிருதத்தில் என்ன சொன்னாலும் யாருக்கும் அது புரியாது என்று குறிப்பிட்ட அவர், இதனால் நீடு புகழோடு வாழ்வாங்கு வாழ வேண்டும் என தாய் மொழியான தமிழில் தான் வாழ்த்துகிறோம் என்றும் தெரிவித்தார். அனைவருக்கும் எளிமையாகவும் புரியும் வகையிலும் இருப்பதாலேயே இதை திராவிட திருமணம் என்று அழைக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் கடவுள்கள்
மேலும், தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களில் இருக்கும் நமது கடவுள்களும் தமிழையே விரும்புவார்கள் என்ற அவர், தமிழ்நாட்டில் உள்ள தமிழ் கடவுள்கள் அனைவரும் தமிழைத்தான் கேட்க விரும்புவார்கள் என்றும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் தமிழிலில் அர்ச்சனை செய்யும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications