சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திகில் படங்களை மிஞ்சும் திருப்பங்கள்.. தமிழகத்தில் நாலே நாளில் நடந்த 3 நம்ப முடியாத ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு, உங்களுக்கு சினிமாவோ, கிரிக்கெட்டோ, பொழுதுபோக்கிற்கு அல்லது திடுக்கிடும் சுவாரஸ்யங்களுக்கு தேவைப்படாது. ஏனெனில் அந்த அனுபவத்தை தமிழக அரசியல் நிலவரமே, உங்களுக்கு அள்ளி வழங்கி விடும்.

மெயின் பிக்சரை யாரும் இன்னும் பார்த்திருக்க முடியாது. ஆனால் டிரைலரே அசத்தி அள்ளுகிறது.

இந்த ட்ரைலரை பார்க்கும் போதே, நீங்கள் சீட்டின் நுனிக்கு வந்து விடுவீர்கள் என்றால், மெயின் படத்தையும் பார்க்க ஆரம்பிக்கும் போது உங்கள் நிலைமை என்ன ஆகும். பிபி மாத்திரைகளை போட்டுக்கொண்டு தயாராக இருக்கவும்.

த்ரில், திகில்

த்ரில், திகில்

சரி விஷயத்துக்கு வருவோம். அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது என்பார்கள். அதற்காக இப்படியா? ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்ட் கொடுப்பது. "பித்த உடம்பு.. மொத்தமா தூக்கிவிட்டுரும்.. இதையெல்லாம் தாங்க முடியாது" என்று கதற ஆரம்பித்து விட்டனர் மக்கள். எத்தனை திடுக்கிடும் திருப்பங்கள்..? திகில் படங்களை மிஞ்சும் காட்சிகள்..! தமிழக அரசியலில் கடந்த, நான்கு நாட்களில் அரங்கேறி உள்ளது என்பதை சற்று உற்று நோக்குங்கள் உங்களுக்கே தெரியும்.

இதுதான் அரசியல்

இதுதான் அரசியல்

பிப்ரவரி 19ஆம் தேதி நிறைந்த பவுர்ணமி.. சூப்பர் மூன் தினம் வேறு.. அன்றுதான், இந்த திகில் காட்சிகளுக்கு வளர்பிறை ஆரம்பித்தது. அன்று காலையில் நிருபர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் வசந்தகுமார் சொல்கிறார், பாமக விரைவில் திமுக கூட்டணிக்கு வரப்போகிறது என்று. அவர் சொல்லி அடுத்த நான்கைந்து மணி நேரத்திற்குள் அதிமுகவுடன், பாமக கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தேனீர் விருந்தும் முடிந்தாகிவிட்டது.

அடேங்கப்பா அந்தர் பல்டி

அடேங்கப்பா அந்தர் பல்டி

வசந்தகுமார் சொன்னதால் மட்டுமே இது ட்விஸ்ட் கேட்டகிரியில் வரவில்லை. பார் உள்ளளவும்.. நீருள்ள அளவும்.. நிலம் உள்ளளவும்.. திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று சொன்ன பாமக தலைவர் ராமதாஸ், அண்ணா பெயரை கட்சியில் பெயரில் தாங்கியுள்ள, அதிமுக என்ற திராவிட கட்சியுடன் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், கூட்டணி அமைத்துக் கொண்ட 'பொன்னான நாள்..அந்நாள்'! திராவிட கட்சிகள் என்று பொதுவாக கூறியிருந்தால் கூட இந்த ட்விஸ்டில் பெரிய சுவாரஸ்யம் இருக்காது. அதிமுக என்று குறிப்பிட்டு பேசி, "அதிமுகவுடன் கூட்டணி வைப்பது என்பது, XXX உடன் உறவு கொள்வது போன்றது" என்று அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை குறிப்பிட்டு ராமதாஸ் கொஞ்ச நாள் முன்பாக, சீறி எழுந்திருந்தார் என்பதுதான் இந்த ட்விஸ்டின் சிறப்பம்சம்.

ஏழுமலையானுக்கே வெளிச்சம்

ஏழுமலையானுக்கே வெளிச்சம்

இந்த எதிர்பாராத திருப்பம் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள், இன்று அடுத்தடுத்து இரு ட்விஸ்ட்டுகள் அரங்கேறின. முதலில் அண்டை மாநிலம் ஆந்திராவில், பரம்பொருள் ஏழுமலையான் சந்நிதிக்கு வெளியே, அந்த ட்விஸ்ட் நடந்தது. பாஜகவை தூக்கி சுமக்க நாங்கள் பாவமா செய்துள்ளோம் என்று சில நாட்கள் முன்பு கேட்ட, அதிமுக சீனியர் தலைவர் தம்பிதுரை, பியூஷ் கோயலுடன், மகிழ்ச்சியாக பேசிவிட்டு, அதிமுக கூட்டணி தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெல்லப்போகிறது என அறிவித்த நாள் இன்று.

யூகங்களை தகர்த்த வியூகம்

யூகங்களை தகர்த்த வியூகம்

பாஜகவோடு அதிமுக கூட்டணி வச்சா அவ்ளோதான்.. தம்பிதுரை தினகரன் பக்கம் போய்விடுவார்.. கரூர் தொகுதியில் அவர் போட்டிபோட மாட்டார்.. ஆஹா, ஓஹோ, அப்படி.. இப்படியெல்லாம், கடந்த சில நாட்களாக, அத்தனை அரசியல் விமர்சகர்களும் கச்சை கட்டி கூறி வந்த நிலையில், தம்பிதுரையோ கூலாக, "போடுங்கம்மா ஓட்டு, இலை, தாமரை சின்னத்தை பார்த்து" என்று சொல்லும் மோடுக்கு போய்விட்டார்.

திடுதிப்பென திமுக

திடுதிப்பென திமுக

ஆளாளுக்கு திடுக்கிடும் திருப்பமா கொடுக்குறீங்க.. நாங்க மட்டும் கம்மியா என்று களத்தில் குதித்தது திமுக. தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாகச் சென்று உடல்நலம் விசாரித்தார். இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தது கிடையாது. திமுகவை எதிரியாகவே பார்த்து வந்தது தேமுதிக. திமுக தொண்டர்களும் அப்படியே பழக்கப்பட்டு விட்டனர். ஆனால் ஸ்டாலின் கிளம்பிச் செல்கிறார் என்று ஊடகங்களில் பிரேக்கிங் செய்தியைப் பார்த்தபோதே, இரு கட்சி தொண்டர்களும் ஒரு நிமிடம் பிரேக் ஆகிவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

கண்ணை கட்டுதே

கண்ணை கட்டுதே

கடந்த நான்கு நாட்களில் நடைபெற்ற இந்த திடுக்கிடும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது, "இப்பவே கண்ணை கட்டுதே" என்கின்றது திருவாளர் பொது ஜனம். ஓட்டுக்காக இன்னும் என்னென்ன கூத்துக்களை இந்த அன்னை தமிழகம் பார்க்கவேண்டியிருக்குமோ தெரியவில்லை. ஏற்கனவே சொன்னது போன்று, எதற்கும், பிபி மாத்திரைகளை போட்டு தயாராக இருந்து கொள்ளவும்.

English summary
Tamilnadu saw 3 major political breakthroughs in the last 4 days, which is no one can expected until it was happened.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X