கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில்... பயணிகள் கண் முன்பே.. ஒரு நொடியில் ஆடிப்போக வைத்த சம்பவம்
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படும் கோயம்பேடு பஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. அப்போது, பஸ் நிலைய நுழைவாயிலில் உள்ள சுமார் 45 அடி உயரம் கொண்ட அலங்கார சுவரின் மீது மர்ம நபர் ஒருவர் ஏறினார். அப்போது அவர் செய்த செயல் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் சுமார் 37 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இருந்து வருகிறத. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் நுழைவாயில் பகுதிகளில் சுமார் 45 அடி உயரம் கொண்ட அலங்காரச் சுவர்கள் மற்றும் வளைவுகள் உள்ளன. இந்த பேருந்து நிலையத்தில் மொத்தம் 6 நடைமேடைகள் உள்ளன. ஒரே நேரத்தில் சுமார் 270 பேருந்துகள் வரை நிறுத்த முடியும்.

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு, கோயம்பேடு முன்பு போல் இல்லை. ஏனெனில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் (மதுரை, நெல்லை, திருச்சி, கன்னியாகுமரி போன்றவை) அனைத்து எஸ்இடிசி பேருந்துகளும் இப்போது கிளாம்பாக்கத்தில் இருந்தே இயங்குகின்றன. எனினும் பெங்களூரு, மைசூர், திருப்பதி, நெல்லூர் மற்றும் ஹைதராபாத் போன்ற மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் இப்போதும் கோயம்பேட்டில் இருந்தே இயங்குகின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் மாநகரப் பேருந்துக கோயம்பேட்டில் வழக்கம் போல் இயங்குகின்றன.
அதேபோல் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருத்தணி, மற்றும் திருப்பதி செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் இப்போதும் கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் பயன்படுத்துகின்றன. இந்த பேருந்து நிலையம் நேற்று முன்தினம் நள்ளிரவு பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. அப்போது, பஸ் நிலைய நுழைவாயிலில் உள்ள சுமார் 45 அடி உயரம் கொண்ட அலங்கார சுவரின் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென ஏறினார்.
இதைப்பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். ஆனால் அந்த நபர் மேலிருந்து கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நள்ளிரவில் நடந்த இந்த பயங்கரத்தைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபருக்கு சுமார் 35 வயது இருக்கும் எனவும் அவர் திட்டமிட்டே சுவற்றின் மீது ஏறி குதித்து உயிரைவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விபரீத முடிவெடுத்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.














Click it and Unblock the Notifications