தமிழ்நாடு பாஜகவில் ஒரே முனுமுனுப்பு.. ஒரு சீனியருக்கு கூட லோக்சபா தேர்தலில் சீட் நஹி?
சென்னை: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி (பாஜக)யில் உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ளதாம். தமிழ்நாடு பாஜக சீனியர்கள் பலரும் ஏற்கனவே அமைதியாக்கப்பட்டுவிட்ட நிலையில் லோக்சபா தேர்தலிலும் கூட ஒருவருக்கும் சீட் கிடைக்க வாய்ப்பில்லை என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
தமிழ்நாடு பாஜக தலைவராக ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அகில இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் இதுதான் நிலைமையாக இருந்தது. ஆனால் காலங்கள் அகில இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் பாஜக தலைமையில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பாஜக தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

கட்சி தலைமை ஒரு முடிவை எடுத்தாலும், குறிப்பிட்ட ஜாதி பிரிவினர் அதை விரும்பாமல் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துதான் வந்ததாக கூறப்படுவது உண்டு. தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்த போதும் இதே நிலைமைதான் இருந்தது. அவருக்கு எதிராக நாள்தோறும் டெல்லிக்கு புகார் பட்டியல் கொடுக்கப்பட்டு வந்தது. தமிழிசை சவுந்தரராஜனுக்கு குறிப்பிட்ட லாபியினர் எந்தவித ஒத்துழைப்பும் தராமலேயே இழுத்தடித்தனர். அதை பலநேரங்களில் மறைமுகமாக தமிழிசை சவுந்தரராஜனும் சுட்டிக்காட்டி இருக்கிறார். ஆனாலும் டெல்லியின் ஆதரவு இருந்ததால் தற்போது ஆளுநராகிவிட்டார் தமிழிசை. தமிழிசை சவுந்தராஜனுக்குப் பின்னர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவராக்கப்பட்ட போதும் இதே நிலைமைதான். ஆனால் தமிழிசை சவுந்தராஜன், எல்.முருகன் பதவி காலங்களில் பாஜகவின் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்பது குறிப்பிட்ட ஜாதியினரை தாண்டியதாகவும் மாறிவிட்டது. தேர்தல் அரசியலுக்கு அந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும்தான் தேவை என்ற நிலைமையும் இல்லை என்பதை டெல்லி மேலிடம் புரிந்து கொண்டது.

தற்போது பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட போதும் இதே நிலைமைதான். பாஜகவில் குறிப்பிட்ட ஜாதியினர் மற்றும் சீனியர்கள் ஒரு பக்கமும் அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்கள் ஒரு பக்கமுமாக நிற்கின்றனர். இந்த இரு கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல்தான் இப்போது உச்சகட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில்தான் கேடி ராகவன், காயத்ரி ரகுராம் என அடுத்தடுத்த விக்கெட்டுகள் வீழ்ந்தன. அத்துடன் கோவை பந்த்தை நடத்த சிபிஆர், வானதி சீனிவாசன் விரும்பியும் நடக்காமல் போனது இந்த மோதலின் உச்சம்தான்.

இப்போது லோக்சபா தேர்தல் விவகாரத்திலும் இந்த அக்கப்போர் அடுத்த அத்தியாத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. பொன்னார், சிபிஆர், எச்.ராஜா போன்ற சீனியர்கள் வரும் லோக்சபா தேர்தலில், சீட் வாங்காமல் போய்விட்டால் இனி எதிர்காலமே அத்வானி போல ஆகிவிடும் என அச்சப்படுகின்றனர். அண்மையில் பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா கோவை வந்த போது, சிபிஆர் தமக்காக கோவை தொகுதியை கேட்டுப் பெற முயற்சித்தார். ஆனால் தமிழக பாஜக தலைமையிலுள்ளவர்கள், வேறு ஒரு ரிப்போர்ட் கொடுத்தது என்கிறார்கள். அடுத்ததாக ராமநாதபுரத்தில் எச்.ராஜா போட்டியிடக் கூடாது என்பதற்காகவே பிரதமர் மோடி போட்டியிடுகிறார் என்கிற தகவலை கிளப்பிவிட்டிருக்கின்றனராம். அதேபோல் கன்னியாகுமரி தொகுதியில் பொன்னார் மீண்டும் போட்டியிடக் கூடாது என்பதற்காக அண்மையில் பாஜகவில் சேர்ந்த ஒரு வழக்கறிஞருக்காக மல்லுக்கட்டுகிறதாம் சென்னை பாஜக தரப்பு. 3 கோஷ்டிகளாக தமிழக பாஜக மாறியுள்ள நிலையில், இந்த மோதல் பாஜகவில் இன்னும் பகீர் ரக பஞ்சாயத்துகளை வெளிப்படுத்தும் என்கின்றன கமலாலய வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications