கட்டக் கடைசியில் இருந்து சர்ருனு மேலே வந்த தமிழ்நாடு.. “திராவிட மாடல்”: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை: ஸ்டார்ட்-அப் பிரிவில் மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வானதற்கு, திராவிட மாடல் ஆட்சியில் செய்த சீர்திருத்தங்களே காரணம் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று ஸ்டார்ட்- அப் விருதுகள் மற்றும் 2022ஆம் ஆண்டிற்கான மாநில தரவரிசை விருதுகள் வழங்கப்பட்டன. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். 'மிகச்சிறந்த செயல்திறன்' பிரிவில் 5 மாநிலங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடும் இடம் பிடித்துள்ளது.

2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஸ்டார்ட் அப்பில் தமிழ்நாடு மிக மோசமான இடத்தில் இருந்த நிலையில், அதன் பிறகு இந்த ரேங்கிங்கில் தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது. இப்போது ஸ்டார்ட் அப்பில் மிகச்சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "StartUp தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது! TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/ பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று. இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தாமோ.அன்பரசன் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்! இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications