இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை புயல்? வெளுக்கபோகுது மழை.. முக்கிய அலர்ட்
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுவதால், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது. இது நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் (நேற்று) வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் இன்று (மே 8) புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகக்கூடும். இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.
வட தமிழகக் கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களிலும், மே 9, 10, 11-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதேபோல, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 11-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 7-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ., விழுப்புரம் மாவட்டம்முகையூர், மதுரை தல்லாகுளத்தில் தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டி அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 11-ம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications