அன்று தமிழர்கள் திருடர்கள்..இன்று அராஜகவாதிகள். மத்திய பாஜக அரசு என்ன ஹெட்மாஸ்டரா? ஸ்டாலின் விளாசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர்களை திருடர்கள் என்று ஒடிஷா தேர்தலின் போது விமர்சித்த பாஜக, தற்போது அராஜகவாதிகள் என கொச்சைப்படுத்துகிறது; உலகத்துக்கே பண்பாட்டை கற்றுத் தந்த தமிழர்களுக்கு நாகரிகம் குறித்து வகுப்பு எடுக்க பாஜக யார்? என திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருவள்ளூரில் இன்று நடைபெற்ற மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான 'தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!' கண்டனப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உண்மையிலேயே மக்களுக்கான - மாணவர்களுக்கான திட்டமாக இருந்தால் நாம் ஏன் அதை எதிர்க்கப் போகிறோம்? அனைவரையும் கல்விக்குள்ளே அழைத்து வரும் திட்டமாக இருந்தால் அதை வரவேற்றிருப்போமே? ஆனால், தேசியக் கல்விக் கொள்கை அப்படிப்பட்டதா? கல்வியில் இருந்து மக்களை நீக்கம் செய்வதற்கான அத்தனை செயல்திட்டங்களையும் கொண்டதாகத்தான் இந்தக் கல்விக் கொள்கை இருக்கிறது! அதனால்தான் எதிர்க்க வேண்டியதாக இருக்கிறது! தேசியக் கல்விக் கொள்கையை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்று அதை வரைவு கொள்கையாக வெளியிட்டபோதே, கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து, தெளிவான ஆய்வறிக்கையை வெளியிட்டோம்! தேசியக் கல்விக் கொள்கை என்பது, கல்விக் கொள்கை அல்ல; அது காவிக் கொள்கை! அது இந்தியாவை வளர்க்க உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை அல்ல; இந்தியை வளர்க்கக் கொண்டு வரப்பட்ட காவிக் கொள்கை! இந்தக் கல்விக் கொள்கை, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை மொத்தமாக அழித்து - ஒழித்துவிடும் என்றுதான் நாம் எதிர்க்கிறோம்!

hindi imposition dmk tamilnadu bjp

தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பது ஏன்?

* சமூகநீதி எனப்படும் இட ஒதுக்கீட்டை தேசிய கல்விக் கொள்கை ஏற்கவில்லை.

* பட்டியலின - பழங்குடியின - இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தரும் உதவித் தொகையை இந்தக் கொள்கை மறுக்கிறது.

* மூன்று, ஐந்து, எட்டு ஆகிய வகுப்புகளில் பொதுத்தேர்வை வைத்து வடிக்கட்டப் பார்க்கிறார்கள்.

* ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறையைக் கொண்டு வரப் போகிறார்கள்! அதாவது ஆல் இந்தியா எக்ஸாம் போன்று நடக்கும்.

* உங்கள் மகனோ, மகளோ 12-ஆம் வகுப்பு முடித்துட்டு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்தில் உடனே சேர முடியாது. இப்போது மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு நீட் தேர்வு வைப்பது போன்று, கலைக் கல்லூரிக்கும் தேர்வு வைத்துதான் எடுப்பார்கள்! அந்தத் தேர்வையும், கல்லூரிகள் நடத்தாது; தேசிய அளவில் தேர்வு ஏஜென்சிதான் நடத்தும்.

* 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படிப்பைத் தொடர விரும்பாத மாணவர்கள், அவர்களாகவே வெளியேறலாம். இவ்வாறு சொல்வதே, "போ..." என்று விரட்டுவதற்குச் சமம்!

* ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி என்ற பெயரால் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போகிறார்கள்! குலத் தொழிலை, ஜாதித் தொழிலைத் தொடராமல், படித்து முன்னேற நினைப்பவர்களை மீண்டும் அதை நோக்கித் தள்ளப் பார்க்கிறார்கள்! இதையெல்லாம் பார்த்துதான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஆணித்தரமாகச் சொல்கிறோம்!

உலகத்துக்கே பண்பாட்டை உருவாக்கித் தந்த தமிழர்கள்

ஆனால், இதையெல்லாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று தர்மேந்திர பிரதான் சொல்கிறார். இரண்டாயிரம் கோடி என்ன? பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஸ்டிராங்காக சொல்லிவிட்டேன்! அந்தக் கோபத்தில்தான் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மேல் கோபப்படுகிறார். நமக்கு ஜனநாயகத் தன்மை இல்லையாம்... நாகரிகம் இல்லையாம்... கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய இனம், நம்முடைய தமிழினம்! உலகத்திற்கு, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பண்பாட்டை உருவாக்கிக் கொடுத்தது. அத்தகைய தமிழர்களுக்கு ஜனநாயகம் தெரியாதா? நாகரிகம் தெரியாதா? வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது! 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று அறம் பேசும் தமிழினத்துக்கு ஜனநாயகத்தைப் பற்றி வகுப்பு எடுக்காதீர்கள்! நீங்கள் என்னவோ ஹெட்மாஸ்டரைப் போல, நாங்கள் மாணவர்கள் போல எங்களுக்கு வகுப்பெடுக்க வந்திருக்கிறீர்களா? தமிழ்நாடு விடாமல் போராடுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நாகரிகமற்றவர்கள் என்று சொல்கிறார் தர்மேந்திர பிரதான்.

தமிழர்களை திருடர்கள் என விமர்சித்த பாஜக

தமிழ்நாட்டைக் கொச்சைப்படுத்துவதுதான் உங்களின் வழக்கம்! ஒடிசா மாநிலத்தில் தேர்தல் நடந்தபோது, மரியாதைக்குரிய நவீன் பட்நாயக் அவர்களின் செயலாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இருந்தார் என்பதற்காக, பிரதமர் மோடியும் - உள்துறை அமைச்சரும் தமிழ்நாட்டை எவ்வாறெல்லாம் கொச்சைப்படுத்தினார்கள்? ஜெகந்நாதர் கோயில் கருவூலச் சாவியைத் தமிழ்நாட்டிற்கு திருடிச் சென்றுவிட்டார்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கருவூலச் சாவி தொடர்பான விசாரணை அறிக்கையைப் பொதுவில் வெளியிடுவோம் என்று பேசினார்களா? இல்லையா? ஜெகந்நாதர் கோயில் கருவூலச் சாவிக்கும் - தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? பிரதமரும் - உள்துறை அமைச்சரும் செய்தது எவ்வளவு பெரிய அவதூறு? அங்கு ஆட்சி மாற்றம் நடந்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 5 மாசம் ஆகிவிட்டது, கருவூலச் சாவி எங்கே என்று ஒடிசா எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார். தமிழர்களைத் திருடர்கள் என்று சொன்னதை வாபஸ் பெறுங்கள் என்று அந்த எம்.பி. சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு அவையில் வாய்மூடி மவுனம் சாதித்திருக்கிறார்கள். இதுதான் அநாகரிகம்!

இந்தி, சமஸ்கிருதம் திணிப்புதான் உங்க நாகரிகமா?

அநாகரிகம் பற்றிப் பேசும் தர்மேந்திர பிரதான் அவர்களே! எது நாகரிகம்? என்று உங்களால் சொல்ல முடியுமா? எங்கள் மாநிலத்தில் இருந்து வரிய வசூல் செய்துவிட்டு, எங்களையே பட்டினி போடுவதுதான் நாகரிகமா? "தமிழ் பிடிக்கும் - தமிழில் பேச முடியவில்லையே" என்று சொல்லிக் கொண்டே, தமிழுக்கு நிதி ஒதுக்காமல் சமஸ்கிருதத்திற்கு நிதி ஒதுக்குவதுதான் நாகரிகமா? தாய்மொழியை வலியுறுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டே அதைச் செய்யாமல் சமஸ்கிருதத்தையும் - இந்தியையும் திணிப்பதுதான் நாகரிகமா? குஜராத்தில் இயற்கைப் பேரிடர் வந்தால், அன்று மாலையே 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதும் - தமிழ்நாட்டில் பேரிடர் வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும், நாங்கள் கேட்டதில் ஒரு விழுக்காடு நிதிகூட ஒதுக்காமல் இருப்பதுதான் நாகரிகமா? ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை மட்டும் அறிவித்துவிட்டு, ஏழு ஆண்டுகாலமாக அதைக் கட்டாமல் ஏமாத்துவதுதான் நாகரிகமா? நாகரிகத்தைப் பற்றி யார் பேசுவது? அநாகரிகத்தின் அடையாளமே நீங்கள்தான்! அநாகரிகத்தையே அராஜகமாகப் பயன்படுத்துவது நீங்கள்தான்! இந்தி மொழியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நிதி தர மாட்டோம் என்று சொல்வதைவிட அராஜகம் இருக்க முடியுமா?

தமிழக எம்பிக்கள் போர்க் குரலை ஒடுக்க சதி

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை அராஜகவாதிகள் என்று சொன்ன தர்மேந்திர பிரதானை, அரை மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டார்கள் நம்முடைய தமிழ்நாட்டு எம்.பி.க்கள். இந்தப் போர்க்குணத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்து வரும் உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைக்கச் சதி செய்கிறார்கள்.

பாஜகவுன் அதன் உதிரி கட்சிகளும் புறக்கணித்த அனைத்து கட்சி கூட்டம்

தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி, தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் இருக்கிறது. இதைக் குறைக்கும் அபாயம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. பொதுவாக, மக்கள் தொகையை வைத்துதான் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. மக்கள் தொகை குறைவாக இருப்பதால், நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கையும் குறையும். தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்று தெரிகிறது. அதாவது, இனி தமிழ்நாட்டுக்கு 39 இல்லை, 31 எம்.பி.க்கள் தான்! நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்! தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். இது வெறும் உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பற்றிய கவலை மட்டுமல்ல. நம்முடைய மாநிலத்தின் உரிமை சார்ந்தது. இதை வைத்து அனைத்துக் கட்சி கூட்டத்தை நாம் கூட்டினோம். பா.ஜ.க., ஓரிரு உதிரிக்கட்சிகள் நீங்கலாக மற்ற கட்சிகள் அனைத்தும் வருகை தந்து நம்முடைய கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் திமுக

இது தமிழ்நாட்டின் பிரச்சினை மட்டுமல்ல, தென் மாநிலங்களின் பிரச்சினை என்பதால், இன்னும் சில மாநிலங்களும் பாதிக்கப்படும் என்று அனைவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். தென் மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாத பா.ஜ.க., வடமாநிலங்களில் பெறும் வெற்றியை வைத்தே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறது. அதுதான் சதி! தங்களுக்கு செல்வாக்கான மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு, தங்களை வளர்த்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். இதைத் தி.மு.க. தடுத்து நிறுத்தும். தென் மாநிலக் கட்சிகள் அனைத்தையும் சேர்த்துக் கொண்டு தடுப்போம்.

மார்ச் 22-ல் சென்னையில் 7 மாநில கட்சிகள் கூட்டம்

தொகுதி மறுசீரமைப்பில் பாதிக்கப்படவுள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்த்து, கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க இருக்கிறோம். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா, மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் இருக்கும் 29 கட்சிகளுக்கு நான் கடிதம் அனுப்பி இருக்கிறேன். பிற மாநில முதலமைச்சர்களுடன் நானே நேரடியாக இன்று காலை முதல் தொலைபேசியில் பேசி வருகிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று இந்தக் கருத்தை எடுத்துச் சொல்கிறார்கள். இதன் தொடர்ச்சியாகச் சென்னையில் பல்வேறு மாநிலக் கட்சிகள் கலந்துக் கொள்ளும் கூட்டத்தை மார்ச் 22-ஆம் நாள் நடத்த இருக்கிறோம்.

கூட்டாட்சிக்கே அச்சுறுத்தல்

இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும் - ஜனநாயகக் கொள்கைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக தொகுதி மறுசீரமைப்பு இருக்கிறது. 39 எம்.பி.க்கள் எழுப்பும் குரலையே ஒன்றிய அரசு ஏற்க மறுக்கும் நிலையில், இந்த எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ - குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அழிக்க முடியாத அநீதி ஆகிவிடும்.

எதேச்சதிகார பாஜக ஆட்சி

பல்வேறு மாநிலக் கட்சிகளும் இணைந்து எடுக்கும் முடிவின்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை நாம் எடுப்போம். நிதி தரமாட்டோம் - அதிகாரத்தைப் பறிப்போம் - இதைக் கேள்வி கேட்டால், தொகுதி எண்ணிக்கையைக் குறைப்போம் என்ற அளவுக்கு எதேச்சாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறது, பா.ஜ.க.

உயிரே போனாலும் அடிபணியமாட்டோம்

உறுதியோடு சொல்கிறேன்! பா.ஜ.க.வின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம். பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்.
மதச்சார்பின்மை சிதைப்பு

பா.ஜ.க.வின் ஆதிக்கவாத சாதிய சிந்தனை - நம்முடைய மக்களின் சமூகநீதியை மறுக்கிறது. பா.ஜ.க.வின் சர்வாதிகாரச் சிந்தனை - நம்மைப் போன்ற மாநிலங்களின் சுயாட்சித் தன்மையை நொறுக்குகிறது. பா.ஜ.க.வின் மதவாதச் சிந்தனை - இந்த நாட்டின் மதச்சார்பற்ற தன்மையைச் சிதைக்கிறது. பா.ஜ.க.வின் எதேச்சாதிகார எண்ணம் - கூட்டாட்சித் தத்துவத்தையே ஒழிக்கப் பார்க்கிறது. இதை இப்போது தடுக்கவில்லை என்றால், பிறகு எப்போதுமே தடுக்க முடியாது.

இனி இந்தியா முழுவதும் போராடும்

சமூகநீதி - மதச்சார்பின்மை - கூட்டாட்சி இந்தியா - மாநில சுயாட்சிக் கோட்பாடுகளின்கீழ் இந்தியாவை அணி திரட்டுவோம். அவ்வாறு அணி திரட்டினால் மட்டும்தான், இந்தியாவைக் காப்பாற்ற முடியும். அதனால், 'தமிழ்நாடு போராடும் - தமிழ்நாடு வெல்லும்' என்ற போராட்டமானது இந்தியா முழுமைக்குமான போராட்டமாக மாறப் போகிறது.

இனி எத்தனை கோடி செலவு செய்தாலும் சமஸ்கிருதம் வளராது

பிரதமர் நரேந்திர மோடி அவர்களே! உங்களுக்கு என்னுடைய வேண்டுகோள்! இந்தியை வளர்ப்பதைவிட இந்தியாவைப் வளர்க்கப் பாருங்கள். எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தாலும், சமஸ்கிருதத்தை வளர்க்க முடியாது. மக்களால் பேசப்படாத மொழியை வளர்க்கக் கோடி கோடியாக கொட்டிக் கொடுப்பீர்கள். உலகமெல்லாம் பல நாடுகளில் அரசு அங்கீகாரத்துடன் மக்களால் பேசப்படும் எங்கள் தமிழ் மொழிக்கு ஓரவஞ்சனை செய்வீர்களா?

இந்தியாவின் பொருளாதார கதி என்ன தெரியுமா மோடி அவர்களே?

நாடு இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது பிரதமர் அவர்களே! ஜி.டி.பி. எனப்படும் இந்திய நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை என்னவாக வைத்திருக்கிறீர்கள்? கடந்த அக்டோபர் - டிசம்பர் ஆகிய மூன்றாவது காலாண்டில் 6.8 விழுக்காடாக வளரும் என்று சொன்னார்கள். ஆனால், 6.2 விழுக்காடுதான் வந்திருக்கிறது. இதுதான் உங்களின் வளர்ச்சி இந்தியாவா?

டாலர் மதிப்பு என்ன?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து சரிந்து படுபாதாளத்துக்குச் செல்கிறது. 2014-ஆம் ஆண்டு நீங்கள் ஆட்சிக்கு வரும்போது அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 58 ரூபாய் 47 பைசாவாக இருந்தது. இப்போது 2025-ஆம் ஆண்டு 87 ரூபாய் 99 பைசாவாக ஆகிவிட்டது. இதுதான் இந்தியாவிற்கான வளர்ச்சியா?

அமெரிக்காவிடம் அவமானம்

அமெரிக்கப் பொருள்கள் மேல் விதிக்கும் கூடுதல் வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டார்கள் என்று, அந்த நாட்டின் அதிபர் வெளிப்படையாகப் பேட்டி அளித்திருக்கிறார். இது அவமானம் இல்லையா? இந்தியாவிற்கு இருக்கும் மதிப்பும் - மரியாதையும் இதுதானா? இந்தியாவின் மதிப்பை உயர்த்த நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?

பற்றி எரியும் மணிப்பூர்

இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் பற்றி எரிகிறது. 250 பேர் பலியாகி இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்புகூட வன்முறை நடந்திருக்கிறது. இதைத் தடுக்க சிறு துரும்பளவு கூட ஒன்றிய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழக மீனவர் பிரச்சனை

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட கைது செய்யப்பட மாட்டார் என்று சொன்னவர் மோடி. அவருடைய பத்தாண்டு கால ஆட்சியில் 3,000 பேர் கைது செய்யப்பட்டார்கள். கடந்த ஆண்டு மட்டும் 550 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டு மாதத்தில் 130 பேர் கைது செய்யப்பட்டார்கள். சிறிய நாடான இலங்கை கூட உங்களை மதிக்கலையே! இதுதான் உங்களுடைய பரிதாபங்கள்! அதனால்தான் அதல பாதாளத்திற்கு இந்தியா இறங்கிக் கொண்டு இருக்கிறது.

நாள்தோறும் வசைபாடினாலும் தமிழ்நாடு போராடும்

இதைத் தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் மாநிலக் கட்சியாக இருந்தாலும் தி.மு.க.விற்கு இருக்கிறது. "இந்தியாவில் மக்களாட்சியைக் காக்கும் முன்னணிப் படையாக திராவிட முன்னேற்றக் கழகம் திகழும்" என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சொன்னாரே! அத்தகைய முன்னணிப் படையாக நாம் செயல்படுவோம். அதற்கு எடுத்துக்காட்டு, நாடாளுமன்றம் தொடங்கியதில் இருந்து ஊடகங்களில் பார்த்தீர்கள் என்றால், இப்போது வரைக்கும் தமிழ்நாட்டைப் பற்றிதான் அனைத்து ஒன்றிய அமைச்சர்களும் பேசுகிறார்கள்! நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, நீங்கள் நாள்தோறும் வசைபாடினாலும், தமிழ்நாடு தொடர்ந்து போராடும்... தமிழ்நாடு இறுதிவரை போராடும்... தமிழ்நாடு இறுதியில் வெல்லும்! வெல்லும்! வெல்லும்!. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+