‘டார்கெட் 10’.. அன்புமணி வகுத்த ஃபார்முலா.. கடலூர் மாடல் ஸ்டார்ட்ஸ்.. மாம்பழம் கனிஞ்சே ஆகணுமாம்!
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொள்ள ஒரு மாவட்டத்தை மட்டும் டார்கெட் செய்து அங்கு தொகுதி வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு எம்.எல்.ஏ தொகுதிக்கும் 15 நிர்வாகிகளை நியமித்துள்ள அன்புமணி ராமதாஸ், அவர்கள் செய்ய வேண்டிய பணிகளை பட்டியலிட்டுக் கொடுத்திருக்கிறாராம்.
இதே பாணியை, அடுத்த 6 மாதங்களில் இன்னொரு 9 தொகுதிகளுக்கு விரிவுபடுத்த அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டிருக்கிறாராம்.
பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பூத் கமிட்டி வேலையை தொடங்கி இருக்கும் நிலையில், தாங்கள் வலுவாக இருக்கும் மாவட்டங்களில் இன்னும் பலம் பெறும் வகையில் அதிரடி திட்டங்களை மேற்கொண்டு வருகிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

பாமக
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பல்தோல்வியைச் சந்தித்தது. தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸும் தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது. வன்னியர் சமூகத்தவருக்கு 10.5% இட ஒதுக்கீடு அறிவிப்பை நிபந்தனையாக முன்வைத்து அதிமுக கூட்டணியில் இணைந்திருந்தாலும், பாமக பெருத்த அடியையே சந்தித்தது.

அன்புமணி ரவுண்டு
இந்நிலையில், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்கும் முனைப்புடன் தயாராகி வருகிறது பாமக. பாமக தலைவராக நியமிக்கப்பட்டது முதல், வட மாவட்டங்களில் தொடர்ச்சியாக சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு, பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் அன்புமணி ராமதாஸ். இதற்கிடையே, தமிழ்நாடு + புதுச்சேரி என 40 எம்.பி தொகுதிகளிலும், பாமகவின் நிலை பற்றி ஆய்வும் நடத்தியுள்ளார் அன்புமணி.

5 மாவட்டங்கள் டார்கெட்
இந்நிலையில், இதில் 5 மாவட்டங்களை டார்கெட் செய்திருக்கிறார் அன்புமணி. கடலூர், தருமபுரி, சேலம், விழுப்புரம், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களை வெற்றி வாய்ப்புள்ள மாவட்டங்களாக கண்டறிந்துள்ளார் அன்புமணி. இதையடுத்து, தேர்தல் வேலைகளை இப்போதே முடுக்கி விட்டிருக்கிறார். கடலூர் நாடாளுமன்றத் தொகுதியை மாதிரி தொகுதியாக தேர்வு செய்து, அதற்கென எம்.எல்.ஏ தொகுதி வாரியாக ஒவ்வொரு தொகுதிக்கும் 15 உறுப்பினர்களை நியமித்துள்ளாராம் அன்புமணி.

மாடல் கடலூர்
ஒவ்வொரு எம்.எல்.ஏ தொகுதிக்கும், மாவட்ட செயலாளர் அல்லது எம்.எல்.ஏ தலைமையில் 15 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முக்கியமான அசைன்மெண்ட்டை அன்புமணி ராமதாஸ் கொடுத்திருக்கிறாராம். இந்தப் பணிகள் தொடர்பாக அவ்வப்போது, மீட்டிங்குகளையும் நடத்தி வருகிறாராம். சமீபத்தில் நடைபெற்ற ஜூம் மீட்டிங்கில், பூத் கமிட்டிகளை அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளார் அன்புமணி.

பூத் கமிட்டி
கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் கட்சி கிளைகளை அமைக்க வேண்டும், பூத் கமிட்டியில் 2 பெண்கள் உட்பட 10 பேர் இடம்பெற வேண்டும், தலித் சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் பூத் கமிட்டி உறுப்பினர்களாக தலித்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் இந்த பணிகள் தொடர்பான ரிப்போர்ட்டை தனக்கு அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும் என உத்தரவு போட்டிருக்கிறாராம்.

அடுத்து 9 தொகுதிகள்
இந்த 'கடலூர் மாடல்' ஃபார்முலா சக்சஸ் ஆனபிறகு, அடுத்து வேலூர், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், சேலம், சிதம்பரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய 9 எம்.பி தொகுதிகளுக்கும் இதே ஃபார்முலாவை விரிவுபடுத்தவும் அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளாராம். இந்த 10 தொகுதிகளில் பாமகவே வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்க வேண்டும் என்பது தான் நிர்வாகிகளுக்கு அன்புமணியிடம் இருந்து பறந்திருக்கும் ஆர்டராம்.












Click it and Unblock the Notifications