லைன்ல காத்திருக்க வேண்டாம்..வீட்டுக்கே வரும் டாஸ்மாக் சரக்குன்னு குஷியான குடிமகன்கள்.. ஆனால்..!
சென்னை: ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் இல்லை எனவும், மதுபானங்களை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்ய, உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி இருப்பதாக வெளியான தகவலுக்கு டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.
குறிப்பாக புத்தாண்டு தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கும். புத்தாண்டு, பொங்கல் சமயங்களிலும் டாஸ்மாக் விற்பனை சாதனை எண்ணிக்கையை கடக்கும். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி அளவுகளில் மதுபானங்கள் விற்கப்படுகிறது.
இந்த நிலையில் குடிமகன்களின் நீண்ட கால குறையை தீர்க்கும் வகையில் டாஸ்மாக் மது கடைகளில் 90 மில்லி கொண்ட கட்டிங் மது பாட்டில்களை விற்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மில்லி மது வகைகளை விற்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டபோது தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.
இதற்கிடையே தமிழ்நாட்டில் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை சொமேட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இதுகுறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்பட்டது.
இதற்கு தமிழகத்தில் இருந்து எதிர்க் கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தன. குறிப்பாக,”தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த முதலமச்சர் மு.க.ஸ்டாலின், மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய திட்டங்களை அனுமதிக்கக் கூடாது. மது வகைகளை ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் அதை தமிழக அரசு கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்.” என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆன்லைன் மூலம் டாஸ்மாக் விற்பனை செய்ய திட்டம் இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே மதுவை கொண்டு சென்று விற்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும், எந்த புது முயற்சியிலும் டாஸ்மாக் இறங்கத் திட்டம் இல்லை.. டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யுவும் திட்டமிடப்படவில்லை என டாஸ்மாக் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications