78% அரசு பள்ளிகளில் 100க்கும் குறைவான மாணவர்கள்.. என்ன காரணம்?.. டேட்டாவோடு விளாசிய ராமதாஸ்!
சென்னை: அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததும் தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்ததற்கு காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
78 சதவிகிதம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 100க்கும் குறைவானோர் தான் படிக்கின்றனர் என்பதிலிருந்தே அரசு பள்ளிகள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன என்பதை உணர முடியும்.

ராமதாஸ் அறிக்கை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம் வழங்குவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் இடம் பெற்றுள்ளது. 8ம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை 36.05 சதவிகிதம், அதாவது 11,251 பள்ளிகளில் 30க்கும் குறைவான மாணவர்கள் மட்டும் தான் பயில்கின்றனர். பல பள்ளிகளில் பத்துக்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் மாணவர்கள் உள்ளனர்.

6 பள்ளிகள் மட்டுமே
13,027 பள்ளிகளில் (41.74%) 31 முதல் 100 வரையிலான மாணவர்களும், 6,111 பள்ளிகளில் (19.58%) 101 முதல் 250 வரையிலான மாணவர்களும் மட்டும் தான் பயில்கின்றனர். 250க்கும் கூடுதலான மாணவர்கள் பயிலும் பள்ளிகளின் எண்ணிக்கை 813 (2.60%) மட்டுமே. 6 பள்ளிகளில் மட்டும் தான் 1000க்கும் கூடுதலான மாணவர்கள் பயில்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை குறித்த இந்த விவரங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியளிக்கக் கூடியவை அல்ல.

அன்றைய சூழல் இதுதான்
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை 90% அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1000-க்கும் கூடுதலான மாணவர்கள் இருப்பார்கள். பல அரசு பள்ளிகளில் இடம் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கும். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது இரு பிரிவுகள் இருக்கும்; நகர்ப்புற பள்ளிகளில் மூன்று பிரிவுகள் இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது 50 மாணவர்களாவது இருப்பர். ஆனால், இன்று ஒட்டுமொத்த பள்ளியிலுமே 50 மாணவர்கள் படிப்பது அதிசயமாகியிருக்கிறது.

ஆசிரியர்கள், கட்டமைப்புகள் இல்லை
தனியார் பள்ளிகள் மீதான மோகம் தான் இதற்கு காரணம் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற அரசு பள்ளிகளில் இடம் கிடைப்பதே அரிதாக உள்ளது. அதற்குக் காரணம் அந்தப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டிருப்பதும், தரமான கல்வி வழங்கப்படுவதும் தான். பெரும்பான்மையான அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததும் தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்ததற்கு காரணம் ஆகும். இந்தக் குறை போக்கப்பட வேண்டும்.

ஊதியத்திற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு
தமிழக அரசுத் துறைகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு தான், பிற துறைகளை விட மிகவும் அதிகமாக ரூ.36,895.89 கோடி நடப்பாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஒதுக்கீடு முழுவதும் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறை பணியாளர்களுக்கான ஊதியம், தொடர் செலவினம் ஆகியவற்றுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். இந்த நிதியைக் கொண்டு கட்டமைப்பு வசதிகளை போதிய அளவில் மேம்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் சேதமடைந்த நிலையில் உள்ளதாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கணக்கெடுக்கப்பட்டது. ஆனால், இன்று வரை அந்த பள்ளிக் கட்டிடங்களை இடித்து விட்டு, புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டித்தரப்படவில்லை.

எப்படி தரமான கல்வி வழங்க முடியுமா?
தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளைக் கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மற்றப் பள்ளிகளிலும் நிலைமை திருப்தியளிக்கும் வகையில் இல்லை. ஓராசிரியர் பள்ளிகள் தவிர, மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு 2 முதல் 3 ஆசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி தரமான கல்வியை வழங்க முடியும்? இத்தகைய பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் எவ்வாறு முன் வருவர்?

சிறப்பு திட்டம் தேவை
அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டுமானால் அது அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதன் மூலம் தான் சாத்தியமாகும். இதை உணர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தல், நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு தரமான பயிற்சி அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான சிறப்புத் திட்டத்தை வகுத்து, அதற்குத் தேவையான நிதியையும் ஒதுக்குவதன் மூலம் அரசு பள்ளிகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதன் பயனாக அரசு பள்ளிகளை நோக்கி அனைத்துத் தரப்பு மாணவர்களும் படையெடுக்கும் நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications