செப்டம்பர் 25ஆம் தேதி கல்வியில் சிறந்த தமிழ்நாடு.. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்கிறார்!
சென்னை: செப்டம்பர் 25ஆம் தேதி சென்னையில், நடைபெறும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்க உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளரும், தமிழக அரசின் செய்தித் தொடர்பாளருமான அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 25ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும். இந்த "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" விழாவில், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.

இத்திட்டம் விரிவாக்கம் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது. மாலை 4 முதல் 7 மணி வரை மேற்கண்ட திட்டங்கள் குறித்தும் அதில் பயன்பெற்ற சாதனையாளர்கள் எடுத்துரைக்க உள்ளனர். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 14.60 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 5.29 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலமும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
காலை உணவு திட்டம் 37,416 பள்ளிகளில் பயிலும் 20.59 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்தியாவிலேயே பெண் குழந்தைகள் உயர் கல்வியில் பயில்வது அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். அதே போல் இருபாலர் உயர்கல்வியில் சேருவது 75 சதவீதம் ஆகும். பெண் பிள்ளைகள் 5.29 லட்சம் பயன்பெற்று வருகின்றனர். 3.92 லட்சம் ஆண் பிள்ளைகள் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.
ரூ.548 கோடி விளையாட்டு கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.150 கோடி அளவிலான ஊக்கப் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை 77 தொகுதிகளில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 12,620 ஊராட்சிகளில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் ரூ.86 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டு உள்ளன.
தேசிய கல்வி நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் பயிலும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் பலர் வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயில அரசு வழிவகை செய்துள்ளது" என்றார்.


Click it and Unblock the Notifications
