8 லட்சம் பேர் இருக்காங்க.. பாட்டாசு வெடிக்கனும்! அண்ணாமலைக்கு ஆதரவாக வந்த தமிழிசை சவுந்தரராஜன்!
சென்னை : பட்டாசுகளை எப்போதும்போல் வெடித்து நம் பாரம்பரிய தீபாவளி திருநாளை கொண்டாடி சிவகாசியில் பணியுரியும் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம் என தெலுங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநரான தமிழிசை சவுந்திரராஜன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகை நாளை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி கடைசி நேரம் கொள்முதலுக்காக கடைவீதிகளில் தமிழகம் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகையின் முக்கிய அம்சமான பட்டாசுகளை வாங்குவதற்காக மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒருநாள் பட்டாசு வெடித்தால் ஒன்றும் ஆகிவிடாது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது சர்ச்சையான நிலையில் தற்போது பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என தெலுங்கானா புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகம், புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் அனைத்து இந்திய சகோதர, சகோதரிகளுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தீபாவளி மகிழ்ச்சியின் வரிசையாகவும், வரிந்துகட்டி வரும் துன்பங்கள் வரிசையாக நாம் வைக்கும் ஒளியில் மறைந்து ஓடவும்..

பிரதமர் நரேந்திர மோடி
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஊசி பட்டாசு கொளுத்தி உவகையுடன் கொண்டாட வைத்து கொரோனா எனும் கொடிய நோயை ஒழித்த தடுப்பூசியை நம் நாட்டிலேயே தயாரித்து நாட்டிற்கு அர்பணித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து..

மண்ணின் மைந்தர்கள்
நாம் வாங்கும் விளக்குகள், புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், பரிசுப்பொருட்கள் என அனைத்தும் நம் மண்ணின் மைந்தர்கள் உழைப்பில் உருவாகும் பொருட்களை வாங்கினால் இந்தியர் அனைவரின் வாழ்வும் ஒளிரும் என்ற பிரதமரின் வரிகளை நினைவு கூர்ந்து நாம் வாங்கும் பொருட்கள் எளிமையான எளியோரின் கொண்டாட்டங்களாகவும் மாறி அனைவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்றும் தீபாவளியாக மலரட்டும்

பட்டாசு தொழிலாளர்கள்
சுயசார்பு இந்தியாவைப் படைக்க ஒளி தரும் தீபாவளியாக இந்த தீபாவளி அமையட்டும். பட்டாசுகளை எப்போதும்போல் வெடித்து நம் பராம்பரிய தீபாவளி திருநாளை கொண்டாடி சிவகாசியில் பணியுரியும் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம். திருநாளன்று நம் பராம்பரிய தன்வந்திரி பிரசாதமாம் "தீபாவளி மருந்தான" திரிகடுகு (சுக்கு,மிளகு,திப்பிலி) உண்டு நம் உடல் நலம் காப்போம்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications