மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்று, நாளை மண்டையை பிளக்கப்போகும் வெயில்.. 5 டிகிரி வரை அதிகரிக்குமாம்
சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கோடை மழை பொய்த்து போன நிலையில் இன்றும், நாளையும் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கத்தரி வெயில் சீசன் தொடங்கும். இந்த காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும். குறிப்பாக மதிய வேளையில் மண்டை பிளக்கும் அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கும். அதன்படி இந்த மாதம் துவக்கத்தில் கத்தரி வெயில் சீசன் தமிழ்நாட்டில் துவங்கியது.

ஆனால் கோடை மழை பல மாவட்டங்களில் பெய்து வந்தது. மேலும் மோச்சா புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் அவ்வப்போது வெயில் குறைந்து இருந்தது. இதனால் பொதுமக்கள் வெயிலில் அகோர பிடியில் இருந்து தப்பித்தனர்.
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கோடை வெயில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை இல்லாத நிலையில் கத்தரி வெயில் காலத்தில் வெப்பம் அதிகரிக்கிறது. குறிப்பாக மதியம் 11 மணி முதல் 2 மணி வரை மக்கள் வெளியே நடமாடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள், காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தான் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வழக்கத்தை விட வெயில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று (மே 19)ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்பிறகு மே 20(நாளை ), மே 21(நாளை மறுநாள்), மே 22 ஆகிய 3 நாட்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் தமிழகம், புதுச்சேரியில் இன்றும் நாளையும் (மே 19, 20) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications