கோயில் விழா அழைப்பிதழில் சாதி பெயர் இடம்பெறக்கூடாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: கோயில் திருவிழாக்களுக்கான அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயரில் சாதி பெயர் இடம்பெறக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சாதியை ஒழிக்க அதிகாரிகள் முயற்சிக்க வேண்டுமே தவிர அதை பெரிதுபடுத்த முயற்சிக்க கூடாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது. இந்த விழாவுக்கான அழைப்பிதழில் சாதிப் பெயர்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி திருப்போரூரை சேர்ந்த சமரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, விழா அழைப்பிதழில் உபயதாரர்களின் பெயர்கள் சாதிப் பெயருடன் இடம் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டு, அறநிலையத்துறை நடத்தும் விழாவில், சாதி பெருமையை ஊக்குவிப்பதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
உபயதாரர்கள் தங்களின் பெயர்களுடன் ஜாதிப் பெயர்களை வழங்கும்போது, ஏற்கனவே வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தவிர்க்கப்பட வேண்டும். இந்த ஆண்டிற்கான அழைப்பிதழ்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு விட்டதாலும், விழா நாளை தொடங்கவுள்ளதாலும், இந்த ஆண்டிற்கு எந்த உத்தரவும் வழங்க இயலாது.
இனிமேல் நடைபெறும் கோவில் விழாக்களின்போது அச்சிடப்படும் அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற வேண்டும். சாதி பெயர்கள் இடம்பெறக் கூடாது என உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்துள்ளார்.
மேலும், அந்த உத்தரவில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனச் சொல்லும் நிலையில், பிறப்பால் மட்டுமே சாதி வருகிறது. பிறப்பு மட்டுமே மக்களை பிளவுபடுத்துகிறது. நாட்டில் சாதியை ஒழிக்க ஒவ்வொரு அதிகாரிகளும் முயற்சிக்க வேண்டுமே தவிர, அதை பெரிதுபடுத்தக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், எந்த கோவிலிலும் உற்சவர் ஊர்வலம் நடைபெறும் போது, சிலைகளை துாக்கி செல்ல தன்னார்வலர்கள் இருப்பார்கள். அதை போன்று உடல் வலிமை கொண்ட பக்தர்களைக் கொண்டு பாதம்தாங்கி குழு அமைத்து மேலாண்மை செய்ய, கோவில் செயல் அலுவலருக்கு அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications