திமுக எம்எல்ஏவை வழிமறித்த அதிமுகவினர்.. கார் கண்ணாடி உடைப்பு.. சென்னை ஆர்.கே.நகரில் திடீர் பதற்றம்!
சென்னை : சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ எபினேசரை அதிமுகவினர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்றது.
சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக ஒரு சில சலசலப்புகளுக்கிடையே அமைதியான முறையில் நடைபெற்றது.

அமைதியான முறையில் வாக்குப்பதிவு
தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்பு மற்றும் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த தேர்தலில் வாக்காளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். குறிப்பாக 100 வயதை கடந்த முதியவர்கள் அதிக அளவில் மாநிலம் முழுவதும் வாக்களிப்பதை காணமுடிந்தது இதேபோல முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் முதல் வாக்கினை பதிவு செய்தனர். சில இடங்களில் பணப்பட்டுவாடா, முறைகேடு புகார்கள் எழுந்தாலும் மற்றபடி பெரிய அளவிலான புகார் இல்லை என்றே சொல்லலாம்.

சென்னையில் பரபரப்பு
தலைநகரான சென்னையில் மட்டும் வழக்கம்போல வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வராததால் தேர்தல் அலுவலர்கள் நீண்ட நேரம் அமைதி காத்து இருந்தனர். அதேபோல சில இடங்களில் பூத்களில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும் கள்ள ஓட்டு போட முயன்றதாகவும் புகார்கள் எழுந்தது. இதனை தேர்தல் ஆணையமும் தமிழக காவல்துறையும் மறுத்து வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டனர்.

திமுக எம்எல்ஏ
இந்த நிலையில் சென்னையில் வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் மாலை 5 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஒரு மணி நேரம் நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், புதுவண்ணாரப்பேட்டை சவுந்தரபாண்டி வழியில் அருகே ஆர்கே நகர் சட்டமன்றத் தொகுதியில் திமுக எம்எல்ஏவான எபினேசர் சென்று கொண்டு இருந்தார்.

கார் கண்ணாடி உடைப்பு
அப்போது அவரது காரை அதிமுகவினர் சிலர் மறித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எபினேசர் கேட்டபோது வாக்குவாதம் எழுந்த நிலையில் திடீரென அவரது காரின் பின்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் சிலர் கல்வீசி உடைத்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு வந்து எபினேசரை அனுப்பி வைத்தனர் மேலும் கல்வீச்சு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications