ரேசன் கடைக்கு பொங்கல் பொருட்கள் வாங்க வீட்டில் இருந்து பை கொண்டு வாங்க... தமிழக அரசு அறிவிப்பு
ரேசன் கடைக்கு பொங்கல் பொருட்கள் வாங்க வீட்டில் இருந்து பை கொண்டு வாங்க... தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: ரேஷன் அட்டைதாரர்கள் வீட்டில் இருந்து பை கொண்டு வந்து பொங்கல் சிறப்பு தொகுப்பை பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் பொங்கல் தொகுப்பு வழங்கும் பைகள் தைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு(pongal parisu thoguppu 2022) அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வருகிற ஜனவரி 4ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

இந்தப் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய பொருட்களும் கரும்பும் இடம்பெற்றுள்ளது.
1088 கோடி ரூபாய் செலவில் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு இந்தப் பரிசு பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை வினியோகிக்க வேண்டும் என்றும், அனைத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. அவர்களை ஒவ்வொரு நாட்களில் நேரத்தை குறிப்பிட்டு பொங்கல் பரிசு பொருட்களை பெறுவதற்கு வரவழைக்க டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படும். பொதுமக்களை சமூக இடைவெளியை கடைப்பிடித்து , கிருமி நாசினி, முககவசம் போன்றவற்றை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பல கடைகளில் பைகள் இல்லாமல் பொங்கல் பொருட்கள் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரேஷன் அட்டைதாரர்கள் வீட்டில் இருந்து பை கொண்டு வந்து பொங்கல் சிறப்பு தொகுப்பை பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், 'கொரோனா கட்டுப்பாடுகளால் பொங்கல் தொகுப்பு வழங்கும் பைகள் தைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பைகள் இன்றி பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் பின்னர் பைகளை பெற்றுக் கொள்ளலாம்.பைகள் இன்றி தொகுப்பு வாங்கும் பயனாளிகளுக்கு தனியே டோக்கன் வழங்கப்படும்.புதிய நெறிமுறைகளை பின்பற்றி பொங்கல் பரிசு தொகுப்புகளை விரைந்து வழங்க பொது வினியோக திட்ட அலுவலர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications