உலகின் ஆகப்பெரிய ஒன்று கூடல்! ஹஜ்ஜுப் பெருநாள்! தமிமுன் அன்சாரி தியாகத் திருநாள் வாழ்த்து!
சென்னை: தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படும் இவ்வேளையில் சகோதரத்துவமும், சமாதானமும் பெருகட்டும் என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹஜ்ஜுப் பெருநாள் குறித்து தமிமுன் அன்சாரி விடுத்துள்ள வாழ்த்து வருமாறு;
''உலகின் ஆகப்பெரிய ஒன்று கூடலாகவும்; வருடாந்திர மானுட சந்திப்பாகவும் 'ஈதுல் அல்ஹா' எனும் பக்ரீத் பண்டிகை திகழ்கிறது.
கடனற்ற ; வசதியும் - ஆரோக்கியமும் கொண்டவர்கள்; வாழ்வில் ஒருமுறையாவது அவசியம் மேற்கொள்ள வேண்டிய புனிதப் பயணமாக இது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனில் ஏறத்தாழ ஆறு அத்தியாயங்களில், 24 தலைப்புகளில் இது பற்றி சிறப்பித்து கூறப்பட்டிருக்கிறது.இறைவனின் ஈடற்ற திருப்தியையும்; வற்றாத பேரருளையும் பெற்றிடும் ஒற்றை நோக்கோடு ; மெக்காவில் உள்ள புனித காஃபா பேராலாயத்தை நோக்கி உலகின் நாலா திசைகளிலிருந்து மக்கள் அணி திரள்கிறார்கள்.
நாடு, மொழி, இனம், சாதி, நிறம் கடந்து சகோதர, சகோதரிகளாக ஒன்று கூடும் உலகின் ஒரே சமத்துவ சந்திப்பு இது மட்டுமே என்பது அழுக்குப்படாத உண்மையாகும். இப்புனித பயணத்தில் பங்கேற்காதவர்கள் , உலகெங்கும் அவரவர் வாழுமிடங்களில் இதனை ஹஜ் பெருநாளாக கொண்டாடுகிறார்கள்.
நம் இந்திய திருநாட்டில் 'பக்ரீத் பண்டிகை' என பொதுவில் குறிப்பிடப்பட்டு, சுமார் 25 கோடி மக்கள் மகிழ்வுடன் இப்பண்டிகையை முன்னெடுக்கிறார்கள். தொழுகை, கால்நடைகளை பலியிடல், விருந்தோம்பல், மகிழ்வான ஒன்று கூடல், சகோதர சமூகங்களுடன் வாழ்த்து பரிமாறல் என கோலகலமாக நமது மண்ணில் பூரிப்புகள் நிகழ்கின்றன.
இந்நன்னாளில் சகோதரத்துவமும், சமாதானமும் பெருகட்டும் எனக் கூறி அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் ,மனித உரிமைகள் மதிக்கப்படவும், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படவும் இந்நன்னாளில் உறுதியேற்போம்.''


Click it and Unblock the Notifications
