பரந்தூரை தொடர்ந்து.. கடலூரில் மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்தும் தவெக- நடிகர் விஜய் பங்கேற்பு!
சென்னை: தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கடலூரில் மீனவர்களை ஒன்று திரட்டி பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி போலீசில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், தமது கட்சி அலுவலகமான பனையூரை விட்டு வெளியே வராமல் இருக்கிறார் என்பது பொதுவான விமர்சனம். இந்த விமர்சனங்களை தவிடு பொடியாக்கும் வகையில் விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலகம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடி வரும் பரந்தூர் பொதுமக்களை நேரில் சந்தித்தார் விஜய்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழாவிலும் விஜய் பங்கேற்றார். இதேபோல குடிநீரில் மலம் கலகப்பட்ட வேங்கை வயல் கிராமத்துக்கும் நடிகர் விஜய் செல்லக் கூடும் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் மீனவர்கள் பிரச்சனையை தமிழக வெற்றிக் கழகம் கையில் எடுக்கிறது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவது, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு சித்தரவதைகளை எதிர்கொள்வது, தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வது உள்ளிட்டவைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை கடிதம் எழுதி இருக்கிறார். ஆனாலும் மீனவர்களின் துயரம் ஓயவில்லை.
இந்த நிலையில்தான் மீனவர்களை ஒருங்கிணைத்து கடலூரில் மிகப் பிரம்மாண்ட போராட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்க இருக்கிறாராம்.
வட தமிழ்நாட்டில் நடிகர் விஜய்க்கு செல்வாக்கு இருப்பதாக நம்பப்படும் நிலையில் கடலூரில் மீனவர்களை ஒன்று திரண்டி விஜய் போராட்டம் நடத்தக் கூடும் என்ற தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் போராட்டத்துக்கு அனுமதி கோரி கடலூர் போலீசில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பரந்தூரில் விஜய் பேசியது என்ன?
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய பின்னர் பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சி பரந்தூர் விமான நிலைய விரிவாக்க எதிர்ப்புப் போராட்டம். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற விஜய், 910 நாட்களுக்கு மேல், உங்களுடைய மண்ணுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் போராட்டம் குறித்து ராகுல் என்ற சிறுவன் பேசியதை நான் கேட்டேன். அந்த குழந்தையின் பேச்சு என் மனதை ஏதோ செய்துவிட்டது. உடனடியாக உங்கள் அனைவரையும் பார்க்க வேண்டும், உங்கள் அனைவருடனும் நான் தொடர்ந்து நிற்பேன் என்று சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. நமது நாட்டுக்கு ரொம்ப முக்கியமானவர்கள், விவசாயிகள்தான். அதனால் விவசாயிகளின் காலடி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத்தான் என்னுடைய பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஒரு முடிவோடு இருந்தேன்; அதற்கு சரியான இடம் பரந்தூர்தான்.
என்னுடைய கள அரசியல் பயணம், உங்களின் ஆசீர்வாதத்தோடு இங்கிருந்துதான் தொடங்குகிறது. தவெக-வின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை எல்லாம் எடுத்துக் கூறினேன். அதில் ஒன்றுதான் இயற்கை வளப்பாதுகாப்பு. இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும், விவசாயிகளைப் பாதிக்கும் இந்த திட்டத்துக்கு எதிராக, சட்டப்போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என்று கூறியிருந்தோம், அதை மீண்டும் உங்கள் முன்பாக மிகவும் உறுதியாக வலியுறுத்துகிறேன். இந்தியாவின் மற்ற பெரிய நகரகங்களான டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களுடன் ஒப்பிடும் போது சென்னை விமான நிலையம் மிகச்சிறியதாக இருக்கிறது; சென்னையில் ஏற்கனவே குடியிருப்புகள் அதிகமாகிவிட்டதால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது. எதிர்காலத்தையும் மனதில் வைத்தே உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்று பேசினார் விஜய்.












Click it and Unblock the Notifications