நடுரோட்டில் விபத்தில் சிக்கியவருக்கு.. சட்டென உதவிய முதல்வர்.. நெகிழ்ச்சி சம்பவம்.. டிரெண்டான வீடியோ
சென்னை: அண்ணா சாலையில் டிஎம்எஸ் அருகே விபத்தில் சிக்கியவருக்கு முதலமைச்சர் காரிலிருந்து இறங்கி வந்து உதவி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வழியாக சென்றுகொண்டிருக்கையில் விபத்தில் சிக்கியவரை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கான்வாய் பாதுகாப்பு வாகனத்திலிருந்து இறங்கி வந்து விபத்தில் சிக்கியவருக்கு உதவியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆம்புலன்ஸ்
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ 48 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதுநிலை, இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான கூடுதல் விடுதிக் கட்டடங்கள் மற்றும் நூலகக் கட்டடம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்ததையடுத்து அவர் தனது இல்லத்திற்கு புறப்பட்டு செல்ல ஆயத்தமானார். தலைமை செயலகத்திலிருந்து வெளிவரும் வழியில் கடற்கரை சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஆம்புலன்ஸ் வந்துள்ளது. முதலமைச்சர் வெளியேறும் நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்ததால் எந்த வாகனத்தை நிறுத்தி வைப்பது என்று அதிகாரிகள் குழம்பினர்.

விபத்து
முதலமைச்சர் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்த சொல்லியுள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்ற பின்னர் அவரது வாகனம் தலைமைச் செயலகத்திலிருந்து வெளியேறி சென்றுள்ளது. இந்நிலையில் வாகனம் அண்ணாசாலையில் டிஎம்எஸ் அருகே வந்துகொண்டிருந்தபொது சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று கவிழ்ந்து இருப்பதையும் அதன் அருகில் ஒருவர் வலியால் துடித்துக்கொண்டிருப்பதையும் முதலமைச்சர் பார்த்துள்ளார். இதனையடுத்து தனது கான்வாயை நிறுத்த சொல்லிவிட்டு காரை விட்டு இறங்கி சம்பவம் நடந்த பகுதிக்கு சென்றுள்ளார். யூகித்ததை போலவே அங்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

உதவி
உடனடியாக பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்களை அழைத்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்க சொன்ன முதலமைச்சர், ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திராமல் அருகில் இருந்த ஆட்டோவில் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்துள்ளார். இதனையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட காயத்தில் இருந்தவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதை அருகில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

வீடியோ
தலைமை செயலகத்திலிருந்து புறப்படும் போதும், சாலையில் விபத்து ஏற்பட்டதை கண்டபோதும் மனிதாபிமானத்துடன் முதலமைச்சர் உதவி செய்துள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சாலையில் பயணிக்கும்போது தலைக்கவசம் அணிவதுடன் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவுடன் விழிப்புணர்வு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications