அமைதிப்படை..அல்வா..அமாவாசை! மணிவண்ணன் என்னும் தீர்க்கதரிசி! சொன்னதெல்லாம் இப்ப நடக்குதே.. உண்மைதான்!
சென்னை : மணிவண்ணன் எனும் மகா கலைஞனை அவ்வளவு சீக்கிரம் தமிழ் திரையுலகில் யாரும் மறந்துவிட முடியாது.. திரைத்துறையைத் தாண்டி அவரது திரைப்படங்கள் தமிழக அரசியலிலும் பொதுமக்களின் வாழ்வியலிலும் இரண்டற கலந்து இருந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சொன்ன பல அரசியல் நிகழ்வுகள் தற்போது நிஜ வாழ்க்கையில் நாம் அனைவரும் கண்டு வருகிறோம்..
இயக்குனராக தமிழ் தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்து பல வெற்றி படங்களை இயக்கி வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பெருமைக்குரியவர் மணிவண்ணன்.
இயக்குனராகவும் நடிகராகவும் தனது திரைப் பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வந்த அவர் ஐம்பதாவது மற்றும் கடைசி திரைப்படமான நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ படத்தை இயக்கியிருந்தார்.அதில் தனது ஆரூயிர் நண்பரான சத்யராஜே நடித்திருந்தார்.

மணிவண்ணன்
இயக்கம், நடிப்பு மட்டுமின்றி பல படங்களுக்கு கதை எழுதியுள்ளார் மணிவண்ணன். நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, ஆகாய கங்கை ஆகியவை அவற்றில் ஒரு சில படங்கள். 1980களில் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனரமாக அறிமுகமான மணிவண்ணன், நூறாவது நாள், ஜல்லிக்கட்டு, சின்னத்தம்பி பெரியதம்பி, 24 மணி நேரம் போன்ற வெற்றி படங்களை தமிழ் திரையுலகில் அழிக்க முடியாத காவியங்களாக அளித்து சென்றவர்.

அரசியல் ஆசை
1954ஆம் ஆண்டு கோவை மாவட்டம் சூலூரில் பிறந்த மணிவண்ணனின் முழு பெயர் மணிவண்ணன் ராஜகோபால். அவரது தந்தை அப்பகுதியில் அரிசி வியாபாரத்தோடு அரசியலிலும் ஈடுபட்டு வந்தார் பிறப்பிலேயே மணிமண்ணனுக்கு அரசியல் ஆசை இருந்தது அவரது தந்தை வழியில் தான். அந்தக் காலத்தில் பியூசி படித்த அவர் பின்பு திரை துறை மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சத்யராஜுடன் இணைந்து நாடகங்களில் நடித்திருக்கிறார்.

பல அவதாரம்
பாரதிராஜாவின் கிழக்கே கோயில் படத்தைப் பார்த்து அவர் எழுதிய நூறு பக்க கடிதத்தை பார்த்த பாரதிராஜா மணிவண்ணனை நேரில் வரவழைத்தார். அதன் பின்னர் அவரிடம் உதவியாளராக சேர்ந்த அவர் கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்தார். பின்னர் தான் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

சிறந்த நடிகர்
ஒரே நாளில் ஒரு இயக்குனர் இயக்கிய இரு படங்கள் வெளியானது மணிவண்ணனுக்கு மட்டும்தான் அதில் இரு திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்தவர் சத்யராஜ். அந்த இரு படங்களும் வெற்றி கரமாக ஓடி பட்டையை கிளப்பியது. அது மட்டும் அல்லாமல் அவ்வை சண்முகி , ஜீன்ஸ், பொற்காலம், படையப்பா, முதல்வன், துள்ளாத மனமும் துள்ளும், சிவாஜி உள்ளிட்ட பல திரைப்படங்களை நடிகராகவும் தன்னை நிரூபித்து வெற்றி பெற்றார் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் அவர்.

அமைதிப்படை
அவர் இயக்கிய திரைப்படங்களில் அழிக்க முடியாத காவியம் என்றால் அது அமைதிப்படை. அரசியல் கல்ட் மூவி என்றால் பலரின் தேர்வு அமைதிப்படையாகத்தான் இருக்கும். இந்தப் படத்தில் நாகராஜசோழன் என்ற கதாபாத்திரம் தற்போது வரை கிளாசிக் கதாபாத்திரம்தான். அன்றாட நிகழ்வுகளில் நாமும் ஆயிரம் நாகராஜசோழன்களை பார்த்து தான் வந்திருப்போம்.. அல்லல்ல அமாவாசைகளை.. ஒரு பிச்சைக்காரனைப் போல வாழ்ந்து வந்த அமாவாசை தமிழகத்தையே ஆட்டிப்படைக்கும் நாகராஜசோழனாக மாறியது எப்படி என்பதுதான் அமைதிப்படை படத்தின் கதை. அதில் பேசும் ஒவ்வொரு வசனமும் இன்று வரை அரசியல்வாதிகளுக்கு சாட்டையடி போல தான் இருக்கும்.

தீர்க்கதரிசி
அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்த மணிவண்ணன் கடவுள் மறுப்பு உள்ளிட்ட கொள்கைகளை மிகத் தீவிரமாக பின்பற்றியவர். தற்போது ரயில்வே துறை தனியார் மையம் ஆகி இருக்கிறது என்பதனை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே விஜயகாந்த் ஹீரோவாக நடித்த தமிழ்செல்வன் படத்தில் தனது வசனத்தின் மூலம் கூறியிருப்பார். ரயில்நிலைத்தில் காத்திருக்கும் மணிவண்ணனை காவல்துறை அதிகாரி அழைக்கும் போது எனக்காக ரயில் இருக்காதா வேண்டுமென்றால் பாருங்கள் ஒரு காலத்தில் ரயில்வே தனியார் மயமாகும்., ஏசி எல்லாம் வைப்பார்கள் என்பார் தற்போது அது நடந்திருக்கிறது.

அமாவாசை
அரசியலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை அந்த படத்தில் நெற்றி பொட்டில் அடித்தார் போல சொல்லி இருப்பார் மணிவண்ணன். அதுவும் தற்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது இப்படி பல காலத்தால் அழிக்க முடியாத காவியங்களை உருவாக்கித் தந்த மணிவண்ணனின் பிறந்தநாள் இன்று. இதனையொட்டி அவரது ரசிகர்களும் நண்பர்களும் மணிவண்ணனுக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடைசி காலத்தில் தமிழ் தேசியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் மணிவண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications