இந்தியாவில் முதல் வானொலி.. உலகத்தில் 2வது மாநகராட்சி.. சென்னை பெருநகராட்சி மாஸ்டர் ப்ளான்
சென்னை: உலகத்திலேயே 2வது மாநகராட்சி நம் சென்னை. அப்படிப்பட்ட வந்தாரை வாழவைக்கும் இந்தச் சென்னைக்கு 384 வயது. இந்த விழாவைச் சென்னை பெருநகர மாநகராட்சி 'தூய்மையான சென்னை'யாகக் கொண்டாடி வருகிறது.
அதைப்போன்று வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையிலுள்ள பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக வினாடி வினா போட்டி ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதில் பங்கேற்று இந்த நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும்படி சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தச் சென்னை தினத்தைக் கொண்டாடும் வகையில் மாநகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு மாநகராட்சி சின்னசின்ன காணொளிகளை வெளியிட்டு உள்ளது. அந்தக் காணொளிகளில் தூய்மைப் பணியாளர்கள் சென்னையைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் Greater Chennai Corporation ட்விட்டர் பக்கத்தில் சென்னை தினக் கொண்டாட்டத்திற்காகப் பலரும் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளது சென்னை பெருநகர மாநகராட்சி.

அதில் துணை மேயர் சைதை மு.முருகேஷ் குமார், "இந்தியாவிலேயே மிகப் பெருமை மிக்க பழமையான ஒரு மாநகராட்சி நமது சென்னை மாநகராட்சி. உலகத்திலேயே 2வது மாநகராட்சி சென்னை மாநகராட்சி. முதல் மாநகராட்சி லண்டனில் மாநகரத்தில் அமைக்கப்பட்டது. இரண்டாவது அமைக்கப்பட்டது சென்னையில்தான்.
சென்னை 384 ஆம் ஆண்டு கொண்டாடும் இந்த வேளையில் "Litter-Free Chennai" என ஒரு திட்டத்தைச் சென்னை மாநகராட்சி கடைப்பிடித்து வருகிறது. நம்ம சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இன்னொரு வீடியோவில் மத்திய மண்டல துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், ஐ.ஏ.எஸ்., "அனைவருக்கும் எனது 384ஆம் ஆண்டு சென்னை தின வாழ்த்துகள். சென்னை மாநகராட்சி இந்தியாவிலேயே மிகத் தொன்மையான மாநகராட்சி. இந்த மாநகராட்சியில் பிறந்து வளர்ந்தவன் நான், இந்த நகரம் எந்தளவுக்கு வளர்ந்து வருகிறது என்பதைக் கண்கூடாகப் பார்த்துவருகிறேன். இந்த ஆண்டு 'தூய்மையான சென்னை'யை அமைக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கூடுதல் தலைமைச் செயலாளர்/ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், "ஜோஷியா சைல்ட் என்பவர் 1687 இல் மெட்ராஸ் கார்ப்பரேஷன் உருவாவதற்குக் காரணமாக இருந்தார்.

இந்தியாவில் 1688 ஆம் ஆண்டு முதல் மெட்ராஸ் முனிசிபல் கார்ப்பரேஷன் ஒரு மேயருடன் அமைக்கப்பட்டது.
அந்த மாதிரியான வரலாறு உள்ள ஒரு மாநகரத்தில் நாம் எல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதைச் சிறப்பாகக் கொண்டாடுவோம்" எனப் பேசியுள்ளார்
இதைக் கடந்து 'சென்னை 384' தினத்திற்காக மாநகராட்சி ஒரு காணொளி பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், மிக இளமையான குரலில் 'படப்படிப்பும் பெறலாம், கணினி, கலைகள் சகலமும் தொடலாம்' என்ற பாடல் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்தப் பாடலில் காசிமேடு மீன், மைலாப்பூர் காபி என எல்லா விதமான கலாச்சார காட்சிகளும் இடம்பிடித்துள்ளன.

மேலும் சென்னைக்கு வாழவந்தவர்கள், இந்நகரத்திலேயே பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பூர்வக்குடிகள் எனப் பல தரப்பினர்கள் பேசும் ஒரு காணொளிப் பதிவும் ஈர்க்கும் படியாக உள்ளது.
அதில் ஒருவர் தான் 2009 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்ததாகவும், அன்று இருந்த சென்னைக்கும் இன்றுள்ள சென்னைக்கும் பல மாற்றங்கள் உள்ளதாகவும் கூறி இருக்கிறார். குறிப்பாகச் சாலை வசதிகள், மெட்ரோ வசதிகள் எனப் பல மாற்றங்களை அவர் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து கடந்த சென்னையில் பிறந்து வளர்ந்த ஒருவர் சில ஆண்டுகளாக வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு, இப்போது மீண்டும் சென்னைக்கு வந்து வாழத்தொடங்கி உள்ளதாகக் கூறிவிட்டு, இந்த நகரம் அடைந்த மாற்றத்தைச் சிலாகித்துப் பேசி இருக்கிறார்.
சென்னையைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு மக்கள் என்ன செய்தார்கள் என்பது பற்றி வரலாற்று ஆசிரியர் வெ. ஸ்ரீராம், "1910 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநகராட்சியின் கமிஷனராக இருந்த ஜெ சாட்ரஸ் மெலோனி என்ன எழுதி இருக்கிறார் என்றால், தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை எடுத்துக்கொண்டே வருவார்கள்.

அதன் பின்னதாகவே பொதுமக்கள் குப்பைகளைப் போட்டுக் கொண்டே செல்வார்கள். ஆக, இதுதான் மெட்ராஸ் என்று அவர் சொல்லி இருக்கிறார். சொல்லப்போனால், அன்று முதல் இன்று வரை இந்த நிலைமை மாறவே இல்லை.
இதை உணர்ந்து நாம் வீட்டில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை எனத் தரம் பிரித்துக் கொடுத்தாலே பாதிக் குப்பைகளை நாம் சரியாக அகற்றி விடலாம். எனவே சென்னையைத் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுவோம்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், "மெட்ராஸ் மாநகராட்சி உடல்நலனுக்குச் செய்த சேவை மகத்தானது. 1914 ஆம் வருடம் உலகம் முழுக்க ஸ்பானிஷ் ப்ளு என்ற ஒரு தொற்றுநோய் பரவியது.

அதைக் கட்டுப்படுத்த மெட்ராஸ் மாநகராட்சி பெரிய அளவில் முயன்றது. அன்று இருந்த மருத்துவர் கே ராகவேந்திர ராவ்தான் இந்த மாநகராட்சியின் சுகாதார அதிகாரியாக இருந்தார். இன்றுகூட வேப்பேரி பகுதியில் அவரது பெயரில் ஒரு பூங்கா செயல்பட்டு வருகிறது.
அதைப்போன்று இந்தியாவில் முதன்முதலாகச் சென்னையில்தான் வானொலி வந்தது. அதை மெட்ராஸ் மாநகராட்சியே நடத்தியது. இதை நான் இன்று சொன்னால் எத்தனைப் பேர் நம்புவார்கள் எனத் தெரியவில்லை? ஆனால் அதான் உண்மை.
1924 ஆம் ஆண்டு காரணவல்லி வெங்கட் கிருஷ்ணசாமி செட்டி என்பவர்தான் மெட்ராசில் முதன்முதலாக வானொலி நிலையத்தை ஆரம்பித்தார். இவர் மெட்ராஸ் மாநகராட்சியின் மின்சார பொறியியல் அதிகாரியாக இருந்தவர். அவர் ஆரம்பித்த மெட்ராஸ் பிரசிடெண்ட்சி ரேடியோ கிளப் சில ஆண்டுகளில் மூடப்பட்டது. அதன் பின்னர் மாநகராட்சி அந்த வானொலியை எடுத்துக் கொண்டது.

அதற்காக ரிப்பன் பில்டிங்கில் ஒரு ரெக்கார்டிங் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டது. அதற்கான டவரில் பிராண்ட்காஸ்ட் சர்வீஸும் தொடங்கப்பட்டது. அதற்குப் பெயர் சென்னை கார்ப்பரேஷன் ரேடியோ.
இந்த வானொலி ஒலிபரப்பை மக்கள் கேட்பதற்காகப் பல பூங்காக்களில் ரேடியோ ஹவுஸ் என்ற அறையை அமைத்தார்கள். அதில் வானொலி வைக்கப்பட்டது. இப்போதும் அதற்கான கட்டடத்தை பனகல் பூங்காவில் பார்க்க முடியும்" என்று அடுக்கடுக்கான ஆச்சரிய தகவல்களைத் தனது காணொளியில் அள்ளி கொடுத்துள்ளார் வெ. ஸ்ரீராம்.
வாழ வைக்கும் சென்னையை நாம் வாழ வைக்க வேண்டாமா?












Click it and Unblock the Notifications