திமுக, அதிமுக செய்த வரலாற்று தவறு? விஜய்க்கு சாதகமானது எப்படி?
சென்னை: பொறுப்புகளுக்கு வர விரும்பும் பல லட்சம் இளைஞர்களை திமுக, அதிமுக ஒதுக்கியது.. திமுகவில் அமைச்சர்கள், அமைச்சர்களின் மகன்களும், அதிமுகவில் அமைச்சர்களும், அமைச்சர்களின் மகன்களுமே அரசியலுக்கு வந்தனர். திமுக அதிமுகவில் உள்ளாட்சி தேர்தல்களில் கூட வம்சாவளியாகவே வெற்றி பெற்றார்கள். புதிதாக யாருக்கும் வாய்ப்பே கிடைக்காமல் போய்கொண்டே இருந்தது. விஜய் தனக்கு சாதகமாக அதனை பயன்படுத்தி பல லட்சம் பேருக்கு பொறுப்புகள் வழங்கினார்.. மாற்றத்தை விரும்பியவர்களுக்கு விஜய் வாய்ப்பளித்தார். திமுக, அதிமுக செய்த வரலாற்று தவறு தான் விஜய்க்கு சாதகமாகி உள்ளது.
தமிழகத்தில் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு இன்று மக்கள் கொடுத்திருக்கும் 'மரண அடி'க்கு முக்கியக் காரணம், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் செய்த ஒரு வரலாற்றுத் தவறுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. "அரசியல் என்பது குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு மட்டுமே" என்ற எழுதப்படாத விதியை உடைத்து, சாதாரண இளைஞர்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுத்த விஜய்யின் 'மாஸ்டர் பிளான்' வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே கடந்த பல ஆண்டுகளாகவே புதிய ரத்தத்தைப் பாய்ச்சத் தவறிவிட்டன. திமுகவை பொறுத்தவரை அமைச்சர்கள், அமைச்சர்களின் மகன்கள், அவர்களின் வாரிசுகள் என ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சுழன்று வந்தது. ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி, ஐ பெரியசாமிக்கு அடுத்து ஐபி செந்தில்குமார், பொன்முடிக்கு அடுத்து கௌதம சிகாமணி, கேஎன் நேருவிற்கு அடுத்து அருண் நேரு, துரைமுருகனுக்கு அடுத்து கதிர் ஆனந்த், அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கப்பாண்டியன், கனிமொழி, தயாநிதி மாறன் லிஸ்டை சொல்லிக்கொண்டே போகலாம். எம்எல்ஏ, எம்பிக்கள் மட்டுமல்ல சாதாரண கவுன்சிலர்வரை எல்லாமே வாரிசுகளாகவே இன்று வரை இருக்கிறார்கள்.
திமுகவில் இப்படி என்றால், அதிமுகவிலும் அப்படித்தான் இருக்கிறது. திமுக அளவிற்கு வாரிசுகள் ஆதிக்கம் அதிமுகவில் இல்லை என்றாலும் கணிசமான அளவு இருக்கிறது. முன்னாள் அமைச்சர்களும், அவர்களின் வாரிசுகளுமே முக்கியப் பொறுப்புகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். கவுன்சிலர் தேர்தலில் கூட குறிப்பிட்ட சிலரே பல ஆண்டுகளாக வருகிறார்கள்
ஒட்டுமொத்தமாக உள்ளாட்சித் தேர்தல் முதல் சட்டமன்றம் வரை கவுன்சிலர் பதவியில் தொடங்கி எம்.எல்.ஏ, எம்பி, அமைச்சர், முதலமைச்சர் பதவி வரை வம்சாவளியாகவே வழங்கப்பட்டதால், பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த சாதாரணத் தொண்டனுக்கும், அரசியலுக்கு வரத் துடித்த இளைஞர்களுக்கும் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன.
இந்த இடைவெளியைத் துல்லியமாகப் பயன்படுத்திக் கொண்ட தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், திராவிடக் கட்சிகளில் ஓரம் கட்டப்பட்ட பல லட்சம் இளைஞர்களுக்கு கதவுகளை திறந்தார். கட்சித் தொடங்கிய சில மாதங்களிலேயே பல லட்சம் இளைஞர்களுக்கு கிளை முதல் மாநிலம் வரை பொறுப்புகளை வழங்கினார் விஜய். "அரசியல் அனுபவம் இல்லை என்றாலும் பரவாயில்லை, மக்கள் சேவை செய்ய ஆசை இருந்தால் வாருங்கள்" என விஜய் விடுத்த அழைப்பு, வாரிசு அரசியலால் சலித்துப் போயிருந்த இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமானது. சமூக வலைதளங்களில் மட்டும் இயங்கிக் கொண்டிருந்த இளைஞர்களை, நிஜ அரசியலில் பங்கெடுக்க வைத்தது தவெக-வின் வெற்றிக்கு அஸ்திவாரமானது.இதுதான் திமுக, அதிமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
திமுக மற்றும் அதிமுக செய்த இந்த வரலாற்றுத் தவறுதான், இன்று விஜய்யை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துள்ளது. பல ஆண்டுகளாகக் கட்சியில் இருந்தாலும் ஒரு சீட் கிடைக்காத விரக்தியில் இருந்த இளைய தலைமுறை, சினிமாவில் ஹீரோவான தங்கள் விஜய்யை, நிஜத்திலும் தனது தலைவனாக ஏற்றுக்கொண்டது அதிமுக, திமுகவிற்கு பின்னடைவாக மாறி உள்ளது. "அமைச்சரின் மகனுக்குத்தான் சீட்" என்ற திராவிடக் கட்சிகளின் கொள்கை, இன்று "சாதாரண விவசாயியின் மகனும் எம்.எல்.ஏ" என்ற தவெக-வின் யதார்த்தத்திடம் தோற்றுப்போய் நிற்கிறது.
இன்று 110-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெற்றி மற்றும் முன்னிலை பெற, இந்த இளைஞர் சக்தியே முக்கியக் காரணமாகும். வாரிசுகளை மட்டுமே நம்பியிருந்த திராவிடக் கட்சிகளுக்கு, உழைப்பை மட்டுமே நம்பி வந்த விஜய்யின் 'இளைஞர் படை' ஒரு பாடத்தைப் புகட்டியிருக்கிறது.














Click it and Unblock the Notifications