தமிழக அரசால் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நபர்.. உயிருடன் வந்த அதிசயம்.. ஐகோர்ட் சரமாரி கேள்வி
சென்னை: இறந்ததாக சொல்லப்பட்ட நபர் உயிருடன் வந்த அதிசயம் நடந்துள்ளது. அதுவும் அரசாங்கத்தால் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக உயிருடன் இருக்கும் நபரை இறந்ததாக அறிக்கை அளித்ததாக எழுந்த புகாரில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையோரம் இலங்கைத் தமிழர்களுக்கான கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாம் பல ஆண்டுகளாக செயல்படுகிறது. இந்த அகதிகள் முகாமில் ஆயிரக்கணக்கான வீடுகள் இருக்கின்றன. இங்கு வசிக்கும் கே.கிருஷ்ணகுமார் என்ற அகதியை திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் இருந்து மதுரை மாவட்டம் உச்சம்பட்டியில் உள்ள முகாமுக்கு மாற்றக் கோரி டி.நாகேஸ்வரி (63) மனு தாக்கல் செய்தார்.
நாகேஸ்வரி தனது மனுவில், நானும் எனது குடும்பத்தினரும் 1990-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தோம். அன்றிலிருந்து மதுரை முகாமில் வசித்து வருகின்றோம். எனது மருமகன் கிருஷ்ணகுமார் 1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்குப் பிறகு, ராமநாதபுரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 2018 இல் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஏழு ஆண்டுகளாக குறைத்தது.
தண்டனை முடிந்து, விடுதலை கால விண்ணப்பத்திற்குப் பின்னர், கிருஷ்ணகுமார் கடந்த ஜூலை 1, 2022 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அன்றிலிருந்து திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார். நான் மதுரை சிறப்பு முகாமில் தன்னுடன் தங்க அனுமதிக்கக் கோரி அளித்த பல முறைப்பாடுகள் இன்றுவரை பரிசீலிக்கப்படவில்லை" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் வழக்கறிஞர் பி.புகழேந்தியும், அவரது மருமகனும் ஆஜராகி வாதாடினார். இது தொடர்பாக வழக்கறிஞர் வாதிடுகையில், தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்க அனுமதி கோரி தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையருக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் விண்ணப்பதாரர் காந்தன் என்கிற கிருஷ்ணகுமார் இறந்துவிட்டதாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர் உண்மையில் உயிருடன் இருக்கிறார். அதிகாரிகள் உண்மைகளை சரியாக சரிபார்க்கத் தவறிவிட்டனர். அவரை திருச்சியில் இருந்து மதுரை சிறப்பு முகாமுக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயிரோடு இருக்கும் நபரை இறந்ததாக எப்படி அறிக்கை அளிக்கலாம் எனக் கேள்வி எழுப்பி, இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 16-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications