செல்லாது, செல்லாது.. அர்ஜூன் சம்பத் மகனுக்கு குட்டுவைத்த உயர் நீதிமன்றம்
சென்னை: கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வெறுப்பு பேச்சு பேசியதாக இந்து மக்கள் கட்சி இளைஞரணித் தலைவரான ஓம்கார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் ஓம்கார் பாலாஜி மன்னிப்பு கேட்காததால் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையம் குறித்து தொடர்ந்து நக்கீரன் வார இதழ் செய்தி வெளியிட்டு வந்தது. இந்நிலையில், நக்கீரன் வார இதழை கண்டித்து கடந்த 27 ஆம் தேதி கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், அர்ஜூன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜியும் கலந்துகொண்டு கோரிக்கை குறித்து பேசினார். அப்போது, ஈஷாவுக்கு எதிராக செய்தி வெளியிடும் நக்கீரன் ஆசிரியர் கோபால் குறித்தும், அவரது நாக்கை அறுத்து விடுவோம் என்றும் பேசியிருந்தார்.
இதுதொடர்பாக, திமுகவைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின்பேரில், பந்தய சாலை காவல் துறையினர் ஓம்கார் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த இரு நாள்களுக்கு முன்பு கோவை கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள வீட்டில் இருந்த ஓம்கார் பாலாஜியை அதிகாலையில் ரேஸ்கோர்ஸ் போலீசார் அதிரடியாக விசாரணைக்காக அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், குற்ற நோக்குடன் செயல்படுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஓம்கார் பாலாஜியிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே காவல் துறையினர் ஓம்கார் பாலாஜியை கைது செய்ததாக கூறி இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
ஓம்கார் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள அழைத்துச் சென்றதாகவும், கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸார் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து அக்கட்சியினர் போராட்டத்தைக் கைவிட்டனர். இதைத்தொடர்ந்து முன்ஜாமின் கோரி ஓம்கார் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்ய ஓம்கர் பாலாஜிக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு ஓம்கர் பாலாஜி நேரில் ஆஜராகி நீதிமன்ற உத்தரவுப்படி மன்னிப்பு கேட்டு மனு கேட்டு மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்று இல்லாமல் தானாக முன்வந்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கப்பதாகத்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து திருத்திய மனுவை ஓம்கர் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யாமல் கால அவகாசம் கேட்டனர்.
இதையடுத்து நீதிபதி, வழக்கை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதுதொடர்பாக அவருக்கு எந்த ஒரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும் மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications