குடும்ப அட்டைதாரர்களே ரெடியாகுங்க.. 17 வருடங்களில் முதல் முறையாக உயரப்போகும் விலை?
சென்னை: வெளிச்சந்தையில் துவரம் பருப்பு 170 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. பாமாயில் 100 ரூபாய் என்கிற அளவில் விற்பனையாகிறது. இப்படி வெளிச்சந்தைகளில் அதிக விலைக்கு விற்பதன் காரணமாக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விலை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் தமிழகத்தில் சிறப்பு வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை வெளிச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு தமிழக அரசு மக்களுக்கு வழங்கி வருகிறது.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.30-க்கும், பாமாயில் ஒரு லிட்டர் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2007ம் ஆண்டு ஒரு கிலோ பருப்பு 50 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்பனையானது. அது போல, பாமாயில் ரூ.45-க்கு வெளிச்சந்தையில் விற்பனையாகி வருகிறது.
ஆனால் தற்போது வெளிச்சந்தையில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்து விட்டது. கடந்த 2014-15-ம் ஆண்டு தமிழக அரசு பருப்பு, பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு ரூ.1,800 கோடி மானியம் கொடுத்து வந்த நிலையில், இப்போது மானியத்தொகை ரூ.3,800 கோடியாக உயர்ந்துவிட்டது.
ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயில் விநியோகம் இனி என்னாகும்? தமிழக அரசு பெரிய முடிவு எடுக்க போகிறதா?
தற்போது துவரம் பருப்பு வெளிச்சந்தையில் ஒரு கிலோ ரூ.155 முதல் 170 ரூபாய் என்கிற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று, ஒரு லிட்டர் பாமாயில் ரூ.95 முதல் 100 ரூபாய் என்கிற அளவில் அதிகரித்து உள்ளது. கொள்முதல் விலை மிக கடுமையாக உயர்ந்த போதிலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று வரை பருப்பு கிலோ ரூ.30-க்கும், பாமாயில் ரூ.25-க்கும் மட்டுமே வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரேஷனில் வழங்கும் பருப்பு, பாமாயில் விலையை அதிகரிக்கலாமா என்று ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேநேரம் இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். எனினும் சில மாதங்களில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பருப்பு, பாமாயில் விலை அதிகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications