அது போன மாசம்.. இது இந்த மாசம்! பருப்பு இல்லாததால் மக்கள் வெறுப்பு.. யார் தான் இதற்கு பொறுப்பு?
சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளில் நிலவும் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் பருப்பு வழங்கப்படும் என தமிழக அரசு கூறினாலும், கடந்த மாதங்களைப் போல இந்தமாதமும் துவரம் பருப்பு வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக துவரம் பருப்பு பாமாயில் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
தேர்தல் நடத்தை வீதிகள் காரணமாக டெண்டர் பிரச்சினை எழுந்ததாகவும் இதன் காரணமாகவே ஆங்காங்கே சில இடங்களில் துவரம் பருப்பு பாமாயில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதை உடனடியாக சரி செய்துள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதே நேரத்தில் பாமாயில் பருப்பு பொது மக்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை என தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் மே மற்றும் ஜுன் மாதங்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அனைத்துக் குடும்ப அட்டைதார்களுக்கும் வழங்கப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அர. சக்கரபாணி அறிவித்திருந்தார். மே 2024 ஆம் மாதத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு 12.05.2024 அன்று பாமாயில் எண்ணெய் மற்றும் 13.05.2024 அன்று துவரம் பருப்பு அதாவது ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டபின் 24 நாட்களிலேயே கொள்முதல் இறுதி செய்யப்பட்டது எனவும், மே 2024 ஆம் மாதத்திற்குரிய பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் ஜுன் மாத முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தாலும், ஜுன் மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ள உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.'
ஆனால் இந்த மாதமும் அதாவது 3வது மாதமாக பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. சென்னை. காஞ்சிபுரம். செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்கள் மட்டுமல்லாது மதுரை. திண்டுக்கல். தேனி. ராமநாதபுரம். சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் பல பகுதிகளில் ஜூன் மாதத்திற்கான சர்க்கரை மற்றும் அரிசி மட்டுமே வந்து சேர்ந்துள்ளதாகவும், ஜூன் மாதத்திற்குரிய துவரம் பருப்பு பாமாயில் ஆகியவை வழங்கப்படவில்லை என புகார் எழுந்திருக்கிறது.
ஏற்கனவே ஏப்ரல், மே மாதங்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை வழங்கப்படாத நிலையில், அவற்றை ஜூன் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த மாதங்கள் மட்டுமல்லாது இந்த மாதத்தில் வழங்கப்பட வேண்டிய துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்படாததால் ஏழை எளிய மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் வெளி சந்தையில் அதிக அளவு விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போதைய சூழலில் துவரம் பருப்பு தரத்திற்கு ஏற்ப 160 முதல் 240 ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில், அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலை இருப்பதாக கூறுகின்றனர் பொதுமக்கள். மேலும் சாதாரண காய்கறிகள் இல்லாத பருப்பு சாம்பார் வைத்தாலே 50 ரூபாய்க்கு மேல் செலவாவதாக கூறுகின்றனர்.
இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களிடம் விசாரித்த போது தேர்தல் நடைமுறை எனக் கூறி கடந்த இரண்டு மாதங்களாக துவரம் பருப்பு பாமாயில் போன்றவை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது ஐந்தாம் தேதி ஆகிவிட்ட நிலையில் தங்களுக்கு வரவேண்டிய துவரம் பருப்பும் பாமாயிலும் வரவில்லை. இதுகுறித்து மேலாளரிடம் கேட்டாலும் அவர்கள் சரியான பதில் அளிப்பதில்லை. ஆனால் பொதுமக்களோ எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். முறையாக வரவேண்டிய பொருட்கள் வந்தால் தானே நாங்களும் தர முடியும்.. தற்போது திண்டுக்கல்லில் சில பகுதிகளில் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் மீதமுள்ள பொருட்கள் வந்ததும் பொதுமக்களுக்கு நாங்கள் விநியோகம் செய்ய தயாராக இருக்கிறோம் என்றனர்.












Click it and Unblock the Notifications