நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த ஸ்டாலின்.. காழ்ப்புணர்ச்சிக்கு தமிழக நலன்கள் பலியா? பாஜக கேள்வி
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில் தமிழகத்திற்கு பல நலன்கள் கிடைக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன்களை விட அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மட்டுமே திமுக முன்னுரிமை அளிக்கிறது என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 -2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திராவுக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பதாகவும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி அயோக் கூட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
இது தொடர்பாக இன்று காலை வீடியோ ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் முக ஸ்டாலின்,"நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்." என கூறியிருந்தார்.
இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன்களை விட அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மட்டுமே திமுக முன்னுரிமை அளிக்கிறது என தமிழக பாஜக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"உங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு தமிழகத்தின் நலன்களை விட்டுக்கொடுக்கலாமா முதல்வரே?
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் 2024-ல், தமிழகத்திற்கு எந்த நலத்திட்டங்களும் இல்லை, அவ்வளவு ஏன்? தமிழ்நாடு என்ற பெயரே பட்ஜெட்டில் இல்லை என்ற தனது கம்பிக் கட்டும் கதையை உண்மையாக்கும் நோக்கில், பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் திரு. முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாட்டின் சுமூகமான நிர்வாகத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்பும் கூட்டுறவும் மிக அவசியம். இரு தரப்பினரின் கூட்டுறவையும் மாநிலங்களின் சமூக பொருளாதரத்தையும் மேம்படுத்தும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக
கூறுவது ஏற்புடையதல்ல.
தங்களுக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்களின் பிரதிநிதியாக அக்கூட்டத்தில் பங்கேற்று, தமிழக மக்களின் தேவைகளை எடுத்துரைக்க மறுப்பதன் மூலம், தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் முட்டுக்கட்டை போடுகிறார். காரணம், நிதி ஆயோக் மூலம் தமிழகம் எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுள்ளது. உதாரணமாக, தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் தளமாக செயல்படும், அடல் (ATAL) சமூக கண்டுபிடிப்பு மையம் தமிழகத்தில் துவங்கப்பட்டது.
2021-ல் நிதி ஆயோக் நகர்ப்புற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கான மாநாட்டை நடத்தியது. தமிழகத்தின் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், நிதி ஆயோக்குடன் இணைக்கப்பட்ட வளர்ச்சிக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் (DMEO) ஆகியவற்றுடனான அறிக்கையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழகத்திற்கு பல நலன்கள் கிடைக்கும் நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன்களை விட, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மட்டுமே திமுக முன்னுரிமை அளிக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications