ஒரே ஆப்பில் எல்லாமே.. மாணவர்கள் பெற்றோருக்காக தமிழக அரசு அறிமுகம் செய்யப் போகும் சூப்பர் செயலி
சென்னை: வருகைப்பதிவு, தேர்வு முடிவுகள் உள்பட மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பெற்றோர்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக நவீன அம்சங்களுடன் புதிய ஆப் ஒன்று அரசால் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் செல்போன் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எப்படி படிக்கிறார்கள், அவர்களின் கல்வித்தரம் எபபடி இருக்கிறது, அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன என்பது பற்றி பெற்றோர் அறிய வேண்டும் என்றால் பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும். அதேபோல் ஆசிரியர்களும் மாணவர்களை பற்றி பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும் என்றால், பெற்றோர்களை நேரில் அழைக்கும் நிலை இருக்கிறது.
தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு தகல்வகளை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒரே நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதாவது வருகைப்பதிவு, தேர்வு முடிவுகள் உள்பட மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பெற்றோர்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக புதிய ஆப்பினை அறிமுகம் செய்ய போகிறது தமிழக அரசு. இந்த ஆப்பில் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 60 ஆயிரம் அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒரு கோடியே 30 லட்சம் மாணவ-மாணவிகளின் விவரங்கள் இடம் பெறுகிறது. இந்த ஆப்பை பொறுத்தவரை பெற்றோர், ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகம் என 3 விதமான “லாக்கின்'' கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆப் எப்படி இருக்கும் என்றால், பெற்றோர் லாக்கினில் மாணவர்களின் வருகைப் பதிவு, வகுப்பு தேர்வு, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இறுதித் தேர்வு முடிவுகளை நேரடியாக சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். இனிமேல் மாணவர்கள் பெற்றோரிடம் பொய் சொல்லவே முடியாது. மேலும் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை தேர்வு செய்து அதன் விவரங்களையும், சமீபத்தில் அந்த பள்ளியில் நடந்த நிகழ்வுகள், பள்ளி சாதித்த நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அறிய முடியும்.
அதுமட்டுமல்லாமல், பெற்றோர் ஆசிரியர்களுக்கு ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினாலும் அதை ஆப் மூலம் தெரிவிக்கலாம். அதன் உண்மைத் தன்மை அறிந்து விரைந்து தீர்வு காணப்பட்டு, அந்த தகவல்களும் பெற்றோருக்கு தெரிவிக்கப்படும். மேலும் பெற்றோர் தங்களுடைய அறிவுப் படைப்புகள், கைவினை படைப்புகளையும் வீடியோக்களாக இந்த ஆப்பில் பதிவேற்றம் செய்யலாம்.
அதேபோல், ஆசிரியர்களுக்கான லாக்கினில், ஆசிரியர்கள் தங்களுடைய படைப்புகள், திறன்களை வெளிக் கொண்டுவர வேண்டும். பாடத்திட்டங்களை எளிதாக மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் நடத்துவது எப்படி? என்பது தொடர்பாக வீடியோக்களை பதிவிட்டால், அது சரியான முறையாக இருந்தால், அனைவரும் பார்க்கும் வகையில் பகிரப்பட்டு, அதனை பயன்படுத்தவும் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆப்பில் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையிலும் ஆசிரியர்கள் பேசி வீடியோக்களை பகிரலாம். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
மூன்றதாவதாக பெற்றோர்-ஆசிரியர் கழகம் லாக்கினில், அனைத்து பள்ளிகளிலும் உள்ள பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் விவரங்கள், செயல்பாடுகளை தெரிந்து கொள்ள முடியும். மேலும் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுடைய விவரங்களும், இதுவரை பள்ளிகளுக்கு அவர்கள் செய்த உதவிகள் குறித்தும் இந்த ஆப்பில் இடம்பெற இருக்கிறது. இதில் பள்ளிக்கு நன்கொடையாளர்கள் பள்ளிக்கு நிதியுதவி அளிக்க விரும்பினால், அந்த பள்ளியை தொடர்பு கொள்ளும் வகையில் தலைமை ஆசிரியரின் செல்போன் எண், பள்ளி இருக்கும் பகுதிகளை காட்டும் 'மேப்' ஆகியவை மூலம் அறிய முடியும்.
இந்த ஆப்பில் முன்னாள் மாணவர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு, தாங்கள் படித்த பள்ளியின் விவரங்களை அறியலாம். மொத்தத்தில் நவீன அம்சங்களுடன், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், மாணவர்களின் நலனை பெற்றோர் அறிய முடியும். ஆசிரியர்களின் வேலைகளை எளிதாக்க இந்த ஆப் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் முதல்வரின் ஒப்புதலுக்கு பின்னர் ஆப் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications